வடக்கே பயங்கரவாத யுத்தத்தையும், இராணுவத்தினரின் யுத்த வெற்றியையும் அரசியல் மயமாக்கி அரசியல் இலாபம் தேட வேண்டும் என்ற எந்தவொரு அவசியமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது அரசுக்கோ கிடையாது. வடக்கே யுத்தம் தொடர்ந்தாலும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து நிராயுதபாணிகளாக ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் வரை இராணுவத்தினரின் யுத்த நடவடிக்கை வடக்கே தொடர்ந்து கொண்டே இருக்கும். இதுவே ஜனாதிபதியின் முக்கிய குறிக்கோள் என மத்திய மாகாண சபையின் மாத்தளை மாவட்ட ஐ. ம. சு. மு. வேட்பாளர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இராணுவத்தினரின் பாரிய முயற்சியின் காரணமாக வடக்கு மீளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கிழக்கை இராணுவத்தினர் மீட்டபொழுது அங்குள்ள மக்கள் எவ்வாறு சுதந்திரக் காற்றை சுவாசித்தனரோ இதே சுதந்திரக் காற்றை வடக்கே உள்ள மக்களும் சுவாசிக்கும் நாள் வெகு தூரத்திலில்லை.
எனவே, கிழக்கு மாகாண மக்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசை வெற்றி பெறச் செய்தது போல், வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களில் அரசை மக்கள் வெற்றி பெறச் செய்தார்களோ இதே வெற்றியை மத்திய மாகாண மக்களும் அரசியல் மற்றும் ஏனையவேறுபாடுகளை மறந்து மத்திய மாகாண சபையை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எனவும் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்