தேசம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு உரிமைகள் வழங்கினாலே இந்த நாட்டுக்கு சுபீட்சம் கிடைக்கும் என்று நாடாளுமன்ற முதல் அமர்வில் (20.08.2020) தமிழ் தேசிய கூட்டணியின் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்,
“எமக்கு இப்பொழுது மிகவும் பலமான ஒரு அரசாங்கம் அமைந்துள்ளது. 1977ம் ஆண்டு இதேமாதிரியான ஒரு அரசாங்கம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் கீழ் இருந்தது. அந்த ஆட்சியின்போதே 1983ம் ஆண்டு கலவரம் இடம்பெற்றது. அந்தக்காலத்து யானையாக இருந்து இன்று தனி ஒரு உறுப்பினராக குறுகிப்போயுள்ள பாதையை இந்த அரசாங்கமும் நிச்சயமாக எதிர்காலத்தில் தொடரக்கூடும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் நாம் விட்ட பிழைகளில் இருந்து பாடம் படித்து எல்லா சமூகங்களும் ஒருவருக்கு ஒருவர் மதிப்புடனும் சமனாகவும் உணருகின்ற வகையிலும் இலங்கை தாய் நாட்டின் பிள்ளைகள் நாம் என்ற இறைமையுடனும் பெருமையுடனும் நடைபோடும் வகையிலுமான சமாதானமும் செழிப்பும் மிக்க ஒரு காலத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன்.
குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையுடன் மரபு, பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக்கப்படுவதன் பிரகாரம் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடைய வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்று கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும்.
சபாநாயகர் அவர்களே, பௌத்த மதத்தை பின்பற்றும் ஒரு நாட்டிலே, மேலாதிக்க அதிகார பிரயோகத்தை நாங்கள் எவரிடம் இருந்தும் எதிர்பார்க்கவேண்டியதில்லை. ஏனென்றால், சிங்கள கிராமத்தவர்கள், ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும் என்பதற்காக பின்வரும் பழமொழியை கூறுவார்கள் என்பது எமக்கு தெரியும். அதாவது, (கல கல டே பல பல வே) முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்பதே அது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.