புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அடிக்கடி வந்து செல்லும் முக்கிய இடமொன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தை பிரபாகரன் இரகசியமாக மறைந்திருக்க பயன்படுத்தியுள்ளதாகவும் விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக போர் விமானங்களைப் பயன்படுத்தி நேற்று மாலை 6.00 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். புலிகள் இயக்கத் தலைவரும், அவரது முக்கிய சகாக்களும் புதுக்குடியிருப்பு காட்டில் அமைந்துள்ள இந்தப் பிரதேசத்தை ஒன்று கூடி ஆராயும் பிரதேசமாகவும் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் படையினருக்கு இராணுவ மற்றும் விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களையடுத்தே உரிய இலக்குகள் மீது விமானப் படையின் ஜெட் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்த விங் கமாண்டர் ஜனக நாணயக்கார, தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமான ஓட்டிகள் உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, முள்ளியாவலை தண்ணீரூற்று பிரதேசத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையை பாதுகாப்புப் படையினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். முன்னேறிவரும் இராணுவத்தின் 59 வது படைப் பிரிவினர் இந்த வைத்தியசாலையை நேற்றுக் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இந்த வைத்தியசாலையின் சுற்றுப்புறம் முழுவதிலும் புலிகளின் பாரிய பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையும் பங்கர்களாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறிகள், குளிரூட்டிகள், சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை அறையிலுள்ள உபகரணங்களையும் புலிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்த அவர், இங்குள்ள அறைகள் முழுவதிலும் மண் மூடைகளைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
சுற்றிவர கட்டடங்களைக் கொண்ட வைத்தியசாலையை காயமடைந்த புலிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பாவிக்கப்பட்டுள்ள தடயங்களும் காணப்படுவதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.