தமிழ் நாடு திருமங்கலம் சட்டப் பேரவை இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தி. மு. க. வேட்பாளர் லதா அதியமான் 39 ஆயிரத்து 266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் 190 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அ. தி. மு. க. சார்பில் முத்துராமலிங்கம், தி. மு. க. சார்பில் லதா அதியமான், தே. மு. தி. க. சார்பில் தனபாண்டியன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 1,38,369 வாக்குகள் பதிவாகியிருந்தன.
இதில் 67,748 ஆண்களும், 70,621 பெண்களும் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே, தி. மு. க. வேட்பாளர் லதா அதியமான் 79,422 வாக்குகளையும், அவரைத் தொடர்ந்து அ. தி. மு. க. வேட்பாளர் முத்து ராமலிங்கம் 40,156 வாக்குகளையும் பெற்றிருந்தனர். அதாவது அ. தி. மு. க. வேட்பாளரைவிட தி. மு. க. வேட்பாளர் 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் தே. மு. தி. க. வேட்பாளர் தனபாண்டியன் 13,136 வாக்குகளையும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபன் 831 வாக்குகளையும் பெற்றனர்.