900 சதுர கிலோமீற்றருக்குள் புலிகள் முழுமையாக முடக்கம்

_army.jpgஆனையிறவுக்கு கிழக்கே அமைந்துள்ள கெவில் பிரதேசத்தை பாதுகாப்பு படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ஆனையிறவை கைப்பற்றிய படைப்பிரிவுகளில் ஒன்றான இராணுவத்தின் 53வது படைப்பிரிவினர் இந்தப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனையிறவைக் கைப்பற்றி அங்கிருந்து கிழக்கை நோக்கி முன்னேறிய 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணரத்ன தலைமையிலான படையினர் கெவில் பிரதேசத்தை வந்தடைந்துள்ளனர். வெற்றிலைக்கேணிக்கு தென்கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள கெவில் பிரதேசம் புலிகளின் மற்றுமொரு பலமான நிலையாக விளங்கியுள்ளது.

கடல் மார்க்கமான சில நடவடிக்கைகளுக்கு புலிகள் இந்தப் பிரதேசத்தைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள வெற்றி லைக்கேணி முதல் கெவில் வரையான பிரதேசத்தை பலப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  புலிகளால் இந்தப் பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளையும், மிதிவெடிகளையும் மீட்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் பரந்திருந்த புலிகளை தற்பொழுது படை நடவடிக்கைகள் மூலம் 900 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் முடக்கி விட முடிந்துள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் இராணுவத்தின் ஒன்பது பிரிவினர் எஞ்சியுள்ள பிரதேசங்களை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

முகமாலை தொடக்கம் ஆனையிறவு வரையான பிரதேசம் கைப்பற்றப்பட்டதையும், ஏ-9 பிரதான வீதி முழுமையாக விடுவிக்கப்பட்டதையும் அடுத்து, யாழ். குடாநாடு முழுவதும் படையினரின் பூரணகட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

சுண்டிக்குளமும், அதனை அண்மித்த சிறியதொரு பிரதேசம் மாத்திரம் யாழ். குடாவில் கைப்பற்றப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர், யாழ். குடாவில் இருந்த புலிகளின் அச்சுறுத்தல் தற்பொழுது நீங்கியுள்ள தாகவும் குறிப்பிட்டார். விடுவிக்கப்பட்ட ஏ-9 பிரதான வீதியின் முகமாலை தொடக்கம் ஓமந்தை வரையான வீதியில் நிலைக் கொண்டுள்ள படையினர், கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இடைக்கிடையே வீதிகளில் ஏற்பட்டுள்ள உடைவுகள் மற்றும் வெடிப்புக்களை திருத்தும் நடவடிக்கைகளை இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சிக்கு கிழக்கே உள்ள வட்டக்கச்சி பிரதேசத்தை கைப்பற்றும் நோக்கில் 57 வது படைப்பிரிவினர் கடுமையான தாக்குதல்களை நடத்தி முன்னேறி வருகின்றனர். அத்துடன், பரந்தனுக்கு கிழக்கே அமைந்துள்ள முரசுமோட்டை பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் முன்னேறிவரும் இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் விசுவமடு பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இரணைமடு பகுதியிலுள்ள புலிகளின் விமான ஓடுபாதைக்கு அண்மித்த பகுதியில் இருதரப்பினருக்கு மிடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வரும் அதேசமயம், 59வது படைப்பிரிவினர் முல்லைத்தீவுக்கு மேற்கை நோக்கி முன்னேறிவருகின்றனர். இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளையும், மண் அரண்களையும் இலக்கு வைத்து கடுமையான தாக்குதல்களை படையினர் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பெரியகுளம், புதுக்குடியி ருப்பு மற்றும் கற்குளம் பகுதிகளில் பல தடவைகள் இடம்பெற்ற மோதல்களுக்கு பின்னர் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட புலிகளின் எட்டு சடலங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர். அத்துடன் ரி-56 ரக துப்பாக்கிகள் 6 அதற்கு பயன்படுத்தும் ரவைகள் 3,850 மற்றும் காட்டுப் பிரதேசத்தில் இருப்பவர்கள் அணியும் உடைகள் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *