கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து வவுனியாவுக்கு வருகை தரும் பொதுமக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 30 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ. சீ. எம். ராசிக் தெரிவித்தார்.
இதுவரை 1,200 ற்கும் மேற்பட்டவர்கள் முல்லைத்தீவு கிளிநொச்சிப் பகுதிகளிலிருந்து வவுனியாவுக்கு வந்துள்ளதுடன் தொடர்ந்தும் மக்கள் வருகை தந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், இம் மக்களுக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை மேற்படி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தரும் மக்களுக்கான நலன்புரி விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெஷில் ராஜபக்ஷ எம்.பி. யின் தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-
விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து அரச கட்டுப் பாட்டுப் பகுதியான வவுனியாவுக்கு வந்து சேர்ந்த மக்களுக்காக வவுனியா மெனிக்பாம் மற்றும் நெலுக்குளம் பகுதிகளில் தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அடம்பன்குளம், பூசனிப்பிட்டி பகுதிகளிலும் மேலும் தற்காலிக வீடுகளை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வவுனியாவில் தங்கியிருப்போருக்கான சமைத்த உணவு, உலருணவுகள், உடைகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட தேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த அவர் இது தொடர்பில் வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளும் வழங்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவித்தார்.