யாழ். குடாநாட்டின் மனிதாபிமான, பாதுகாப்பு நிலைவரங்களை நேரில் கண்டறிவதற்காக பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் மார்க் கூடிவ் இருநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தமது விஜயத்தின்போது அவர் யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய படைத்தளபதி, யாழ்.மறைமாவட்ட ஆயர், அங்குள்ள சர்வதேச அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்தார்.
அதேசமயம் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கும் சென்று நிலைமையை நேரில் அவர் கண்டறிந்தார். மேலும், வரலாற்று புகழ்மிக்க நல்லூர் ஆலயம், யாழ்ப்பாண நூல் நிலையம் ஆகியவற்றுக்கும் பிரிட்டிஷ் தூதுவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை யாழ்.அரச அதிபருடனான சந்திப்பு நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்ட செயலகத்திலுள்ள அரச அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பின்போது குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள், வன்னியில் இடம்பெறும் யுத்தத்தால் குடாநாட்டுக்கு இடம்பெயர்ந்து வருவோரைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதித் தூதுவருடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகத்தின் அரசியல் மற்றும் ஊடக அதிகாரி நிருபன் முத்தையாவும் வருகை தந்திருந்தார்.