இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் விஜேசிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய உயர்மட்டத் தூதுக்குழு எதிர்வரும் வியாழன் அல்லது வெள்ளிக் கிழமையளவில் கொழும்புக்கு வருகைதரும் சாத்தியம் காணப்படுகிறது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் வன்னிப் பகுதியிலுள்ள 3 இலட்சம் பொதுமக்களின் நிலைமை குறித்து இலங்கைத் தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியத் தூதுக்குழு வருகை தரவிருப்பதாக “நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்தது.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் இந்திய அரசாங்கத்திடம் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அந்த அடிப்படையிலேயே இந்தியத் தூதுக்குழு இங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது, என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ “ஐலன்ட்’ பத்திரிகைக்கு கூறியுள்ளார். ஜனவரி 15 அல்லது 16 இல் இந்தியத் தூதுக்குழு கொழும்புக்கு வருகை தருமென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. முல்லைத்தீவு முற்றுகையிடப்பட்டிருக்கும் தருணத்தில் இந்தியத் தூதுக்குழுவின் வருகை முக்கியமான விடயமாக கருதப்படுகிறது.