கொலைக் களமாக மாறியுள்ள தேசத்தை மீட்டெடுத்து ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு அனைத்துச் சக்திகளையும் ஓரணியில் திரளுமாறு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரச பயங்கரவாதம் உடனடியாக தோற்கடிக்கப்படாவிட்டால் நாடு சுடுகாடாக மாறும் நிலை ஏற்பட்டுவிடுமென எச்சரிக்கை விடுத்தார். லசந்த விக்கிரமதுங்கவுக்குப் பிறகு இன்னொரு படுகொலை விழுவதை எவரும் அனுமதிக்கக்கூடாது எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். சண்டே லீடர் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிச் சடங்கு நேற்று திங்கட்கிழமை மாலை பொரளை கனத்தை பொதுமயானத்தில் நடைபெற்றபோது இரங்கலுரை நிகழ்த்துகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
லசந்த விக்கிரமதுங்கவின் பூதவுடலுக்கு முன்னால் அலைமோதிய பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இரங்கலுரை நிகழ்ச்சி இடம்பெற்றது. அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது; லசந்த விக்கிரமதுங்க ஊழல் மோசடியில் ஈடுபடவில்லை. ஊழல் மோசடிக்கு எதிராக குரல் கொடுத்தார். மனித உரிமைகளை மீறவில்லை. அதற்கு எதிராக எழுதினார். மக்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கவில்லை. மாறாக அதனை எதிர்ப்பதற்கு தனது பேனையை பயன்படுத்தினார். இன்று அரச பயங்கரவாதம் லசந்தவை படுகொலை செய்துவிட்டது. கடந்த காலத்தில் லசந்தவுக்கு ஜனாதிபதி பல தடவைகள் அச்சுறுத்தல் விடுத்துவந்துள்ளார். கீத் நொயாரைத் தாக்கியதன் மூலமும் ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலமும் எச்சரித்துள்ளார். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் லசந்த தைரியமாக தனது பேனையையும் கடதாசியையும் அராஜகத்துக்கு எதிராக பயன்படுத்தினார்.
லசந்தவின் படுகொலைக்கு முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்கவேண்டும். மக்களுக்காக பேசிய ஒரு குரல் இன்று மௌனமாக்கப்பட்டுவிட்டது. நாடு இன்று ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியைப் போன்று மாறியுள்ளது. நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டிய தருணம் உருவாகியுள்ளது. மக்கள் கொன்று குவிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருப்பதா? அல்லது அரசியல் முரண்பாடுகளை மறந்து ஒன்றுபட்டு அராஜக ஆட்சிக்கு முடிவுகட்டுவதா என்பதைப் பற்றி உடனடி முடிவெடுக்கப்படவேண்டும். லசந்தவின் பூதவுடலுக்கு முன்பாக இருந்து நாம் இன்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு படுகொலை இடம்பெறுவதற்கு முன்னர் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் உறுதிப்பாடே அதுவாகும். எல்லோரும் என்னுடன் ஒன்றிணையுங்கள் உங்களையும் நாட்டையும் காப்பாற்ற நான் உத்தரவாதம் தருகின்றேன். என் உயிரைப் பணையமாக வைத்தேனும் தேசத்தை அழிவிலிருந்து பாதுகாக்க உறுதியளிக்கின்றேன். எமக்கிடையே அரசியல் கருத்து முரண்பாடுகள் காணப்படலாம். அவற்றை கொஞ்சம் காலத்துக்கு ஒதுக்கிவைப்போம். நாட்டின் பொது எதிரியை முறியடிக்க அனைவரும் ஒன்றாக கைகோர்ப்போம். இதுதான் எமக்காக, நாட்டுக்காக தன்னுயிரைக் கொடுத்த லசந்தவுக்கு நாம் செய்யக்கூடிய கைமாறாகும் எனவும் ரணில் தெரிவித்தார்.