காஸாப் பள்ளத்தாக்கிலுள்ள ஹமாஸ் போராளிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் ரிசேர்வ் இராணுவத்தினரையும் ஈடுபடுத்தியுள்ள இஸ்ரேல் அங்கு முழு அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக் கடத்தல்களை மேற்கொள்வதாகக் கருதப்படும் காஸா எகிப்து எல்லையிலுள்ள சுரங்கப் பாதையை தாக்கியழிப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேலியப் படைகள் ஆரம்பித்துள்ளன.
போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புக்களை நிராகரித்து 17 ஆவது நாளாகவும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 900 ஐ எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுக்களை நடத்திய இஸ்ரேலியப் பிரதமர் எஃகுட் ஒல்மேர்ட், பாதுகாப்பு அமைச்சர் எஃகுட் பராக் மற்றும் வெளியுறவு அமைச்சர் லிவ்னி ரிஸிபி ஆகியோர் ஹமாஸ் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக அந்நாட்டு வானொலிச் சேவையொன்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் ஹமாஸின் திறனை முற்றுமுழுதாக அழிப்பதென சபதமெடுத்துள்ள இஸ்ரேலிய தலைவர்கள் காஸாவில் தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் பொருட்டு ரிசேர்வ் இராணுவத்தினரை நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளனர். இந்நடவடிக்கை இஸ்ரேலிய இராணுவத்திற்கு பலத்த சேதங்களை உருவாக்குமெனக் கருதப்படுவதுடன் தப்பித்து செல்ல வழியின்றி சிறிய பரப்பளவைக் கொண்ட காஸாப் கரையோரப் பகுதியில் சிக்கியிருக்கும் 15 இலட்சம் பாலஸ்தீனர்களுக்கும் இந் நடவடிக்கை கடும் சேதங்களை உருவாக்குமென அஞ்சப்படுகிறது.
காஸாவின் தென்பகுதியில் ரிசேர்வ் இராணுவத்தினர் குவிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 கிலோமீற்றர் நீளமான எகிப்துடனான சுரங்கப் பாதையை தகர்ப்பதற்காக அங்கு தொடர் விமானத் தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேல் அதனை குண்டுவைத்து தகர்க்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தமது தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டமைக்கான இலக்கை அடைவதற்கு தாம் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அதே நேரத்தில் இராஜதந்திர முயற்சிகள் தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இத் தாக்குதல்களில் இதுவரை 890 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் 3,600 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக காஸா மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, 10 படையினர் உட்பட 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கின்றது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 40 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. காஸாவின் பிரதான மருத்துவமனை இடிந்து விழும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் அடிப்படை மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் டோர்ச் லைற்றின் உதவியுடனேயே சில சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதுடன் ஷெல் தாக்குதல்களினால் 12 அம்புலன்ஸ் பணியாளர்களும் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.