இந்தியாவை தளமாக கொண்டியங்கும் பார்தி எயார்ரெல் தொலைத்தொடர்பு சேவை திங்கட்கிழமை முதல் இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் தனது சேவைகளை விஸ்தரிப்பதற்காக கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் நூறு மில்லியன் அமெரிக்க டொலரினை முதலீடு செய்திருந்த எயார்ரெல் அடுத்து வரும் 3 வருடத்துக்குள் மேலும், நூறு மில்லியன் அமெரிக்க டொலரினை முதலீடு செய்யவுள்ளது.
நாட்டின் 60 சதவீதமான பகுதிகளில் தற்பொழுது எயார்ரெல்லின் சமிக்ஞை கிடைக்கப்பெறுவதுடன், இலங்கையில் பார்தி எயார்ரெல் லங்கா (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனம் என்ற பெயருடன் இயங்குகின்றது. இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த எயார்ரெல் குழுமத்தின் தலைமை முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் பார்தி மிட்டல் நாட்டின் வளர்ச்சியில் தாமும் பங்கு கொள்வதாகத் தெரிவித்தார்.
மேலும், இலங்கைச் சந்தையில் ஓர் முக்கிய இடத்தினை பெறுவதற்கு எயார்ரெல் கடுமையாக உழைக்குமெனவும் தொலைத்தொடர்பு மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடான இணைய சேவை போன்றவற்றை மக்கள் மேலும், அதிக வசதிகளுடன் அனுபவிக்கலாமெனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் 88 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதன் அனுபவத்தின் மூலம் இலங்கையின் தொலைபேசி வலையமைப்பிலும் ஒரு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தப்போவதாகவும் சுனில் பார்தி மிட்டல் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் தற்பொழுது 2.9 மில்லியன் நிலையான தொலைபேசி பாவனையாளர்களும் 7.9 மில்லியன் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களும் 2 இலட்சம் இணையத்தள பாவனையாளர்களும் உள்ளனர். எயார்ரெல்லின் வருகையை தொடர்ந்து நாட்டிலுள்ள ஏனைய கையடக்கத்தொலைபேசிச் சேவை வழங்குநர்கள் அழைப்புக்களுக்கான கட்டணங்களை குறைத்துள்ளதுடன் கழிவுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.