கிழக்கை விட துரிதமாக வடக்கை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் திட்டமாகும். இது தொடர்பான இரண்டாவது முக்கிய பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் இன்று நடைபெறவுள்ளதாக தகவல், ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
வடக்கை மீட்டு முழுமையாக அபிவிருத்தி செய்வதுடன், அம்மக்களுக்கான இயல்பு வாழ்க்கையை துரிதமாக பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துமென தெரிவித்த அமைச்சர், வடக்கின் துரித அபிவிருத்தி தொடர்பான முதலாவது கலந்துரையாடலில் வடக்கின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் இந்தியத் தூதுவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகுமெனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கத்தின் சகல நடவடிகைகளையும் விமர்சனத்துக்குள்ளாக்கி அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்கா படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோமென மதவாச்சியையே கைப்பற்றப் போகின்றனர். அலிமங்கடவைக் கைப்பற்றுவோமென்று கூறி பாமன்கடையையே கைப்பற்றுவர் எனத் தெரிவித்தார். இன்று நடந்துள்ளது என்ன என்பதை சகலரும் அறிவர்.
வடக்கின் அபிவிருத்தி சம்பந்தமாக அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. சிறந்த திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அதனைத் துரிதமாக நடை முறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது படையினரின் மனிதாபிமான நட வடிக்கைகள் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்துள்ளார். 1983ம் ஆண்டு கால கட்டத்திலுள்ள சில காட்சிப் படங்களை வைத்துக் கொண்டு சில சக்திகள் பொதுமக்கள் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படுவதாகப் பிரசாரங்களை மேற்கொள்ளுகின்றனர்.
வாகரையிலிருந்து 14,000 பொது மக்களைப் படையினர் எவ்வித பாதிப்புமில்லாதவாறு வெளிக்கொணர்ந்தமை குறிப்பிடத்தக்கது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.