புலிகளின் இனங்காணப்பட்ட முக்கிய இலக்குகள் மீது இலங்கை விமானப் படையினர் நேற்றுக்காலை முதல் மாலை வரை 9 தடவைகள் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவ்விமானத் தாக்குதல்களின்போது புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடிக்கடி கூடும் முக்கிய இடங்கள் இரண்டும், இரண்டு பீரங்கி நிலைகள் மீதும் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ – 24 மற்றும் ஜெட் ரக விமானங்களை பயன்படுத்தியே புலிகளின் இனங் காணப்பட்ட இந்த இலக்குகள் மீது ஒன்பது தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். முல்லைத்தீவு நோக்கி தரை வழியாக முன்னேறிவரும் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே நேற்றுக்காலை முதல் மாலை வரை மேற்படி பகுதிகளில் எட்டு தடவைகள் விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
முல்லைத்தீவு நகருக்கு தெற்கே அமைந்துள்ள புலிகள் சந்திக்கும் முக்கிய இரகசிய இடமொன்றை இலக்குவைத்து நேற்றுக்காலை 9.10, 9.20, 11.30 மற்றும் மாலை 3.35 ஆகிய வேளைகளிலேயே விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை முல்லைத்தீவுக்கு அருகிலுள்ள புலிகள் சந்திக்கும் இன்னுமொரு முக்கிய இரகசிய இடம் மீதும் காலை 10.15 மணி, நண்பகல் 12.10, 1.45 மாலை 3.15 ஆகிய நேரங்களில் ஜெட் விமானங்கள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டன.
அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் களப்புக்கு அருகில் இனங்காணப்பட்ட புலிகளின் இரண்டு பீரங்கி நிலைகளையும் விமானப் படையினரின் ஜெட் விமானங்கள் தாக்கியழித்தன. விமானப் படையின் உளவுப் பிரிவினர் இலக்குகளை நன்கு இனங்கண்டதன் பின்னரே தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறிய ஊடக மத்திய நிலைய அதிகாரி மேற்கொள்ளப்பட்ட ஒன்பது தாக்குதல்களும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.