ஐ.நா. செயலாளர் பான்கிமுன் அவசர விஜயமொன்றை மேற்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவுள்ளார். இன்று புதன் கிழமை அவர் எகிப்து , ஜோர்தானுக்குச் சென்று காஸாவில் தோன்றியுள்ள அப்பாவிகளின் நெருக்கடிகளை நிறுத்துவது பற்றி பேசுவார். இஸ்ரேலை காஸா மீதான தரை, வான் தாக்குதல்களை நிறுத்துமாறும் ஹமாஸை ரொக்கட் தாக்குதலை நிறுத்துமாறும் கோரவுள்ளதாக பான்கிமுன் சொன்னார்.
அப்பாவிகளையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் நோக்கில் அமைந்துள்ள தனது விஜயம் வெற்றி பெற அனைத்து வழிகளையும் செல்வாக்குகளையும் பாவிக்கவுள்ள பான்கிமுன் லெபனான், சிரியா, துருக்கி, குவைத் ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார்.
ஐ.நா. வின் ஆலோசனைகளை இரு தரப்பும் நிராகரித்தமையால் சிவிலியன்கள் வாழ்வு கவலைக் கிடமாகியுள்ளதாக பான்கிமுன் கவலை வெளியிட்டுள்ளார். ஹமாஸ¤க்கு நெருக்கமான நாடுகளான லெபனான், சிரியாவிடம் ரொக்கட் தாக்குதலை நிறுத்தும்படி ஹமாஸை வற்புறுத்துமாறு கோரவுள்ளதுடன் இஸ்ரேலிடம் நேரடியாக தாம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
எகிப்தின் எல்லைகளைத் திறந்து பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேலும் எகிப்தும் உடன்பட வேண்டும். இதுபற்றியும் பான்கிமுன் பேசுவார் இதுவரை 900 பேர் பலியாகியுள்ளனர். நாலாயிரம் பேர் காயமடைந்துள்ளனர். காஸாவில் காயமடைந் தோர் படும் அவலம் காண்போரைக் கண் கலங்க வைக்கும்.
தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் இணங்கி சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதை நிராகரித்த ஹமாஸ் தமது போராளிகள் வெற்றிப் பாதையில் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளது. தரைத் தாக்குதல் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து பாடசாலைகள், பொது இடங்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
மத்திய கிழக்கு விஜயத்தை முடித்துக் கொண்டு பான்கிமுன் 20ம் திகதி அமெரிக்கா செல்வார். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளும் பான்கிமுன் காஸாவின் நிலவரம்பற்றி ஜனாதிபதியிடம் பேசவுள்ளதாகவும் ஐரோப்பிய யூனியனின் பங்களிப்பு அரபு நாடுகளின் தலையீடுகளின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி பராக் ஒபாமாவை கோருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.