பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு முள்ளந்தண்டு மாற்றுச் சத்திர சிகிச்சை தேவை!!!

மழை வரும் வராமலும் இருக்கும்!
சம்பந்தன் அண்ணை ஜனநாயமாக நடப்பார் அப்படி இல்லாமலும் இருப்பார்!!
கோத்தபாயா அபிவிருத்தியயை முன்னெடுப்பார் முன்னெடுக்காமலும் இருப்பார்!!!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு முள்ளந்தண்டு சிக்கல்கள் நிறைய உள்ளது. அதில் பா உ சித்தார்தனுக்கே கூடிய சிக்கல் உள்ளது. தேர்தல் முடிவிற்குப் பிறகு பா உ சித்தார்த்தன் டான் தொலைக்காட்சியின் ஸ்பொட் லைட் வழங்கிய நேர்காணலில் என்ன சொல்ல வருகின்றார் எனபது சித்தார்த்தனுக்கும் புரியவில்லை இவரை நேர்காணல் செய்த ஊடகவியலாளர்களுக்கும் புரிந்ததாகத் தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று ரீதியான தோல்வியயைக் கண்டுள்ள நிலையில் பத்து ஆண்டுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதனும் தர்மலிங்கம் சித்தார்த்தனும் அரசியல் முதுகெலும்பு இல்லாததால் அல்லது அது இத்துப் போனதால் தான் குப்பை கொட்டினர் என்பது உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர் அறிந்த இரகசியம். சிவசக்தி ஆனந்தன் அருந்தவபாலன் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு ஏற்படும் என்று அறிந்த புத்திசாலிகள். இப்படியான முதுகெலும்பற்ற புத்திசாலிகள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குத் தேவை. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு அழைக்கப்பட்ட கூட்டமொன்றில் கூட த சித்தார்தனுக்கு இருப்பதற்கு ஆசனமே வழங்கப்படமால் அவமானப்படுத்தப்பட்டார். அப்படி இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நின்றால் ஒரு ஆசனம் கிடைக்கும் என்பதால் தான் இணைந்தார். அதற்கான பலனை அனுபவிக்கின்றார்.

த சித்தார்த்தன் புளொட் இயக்கமாக இருக்கும் போதும் சரி அரசியலுக்கு வந்த போதும் சரி முதுகெலும்பற்ற ஒருவராகவே செயற்பட்டார். புளொட் அமைப்பில் அவர் தலைமையேற்ற போது நடந்த எந்தக் கொடூரச் செயலையும் அவர் தட்டிக்கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முற்படவில்லை. இவர் பிறகெப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகமின்மையைத் தட்டிக் கேட்பார். நாட்டில் நடக்கும் ஜனநாயக மறுப்பைத் தட்டிக் கேட்பார். தன்னைச் சுற்றி என்ன அநியாயம் நடைபெற்றாலும் அது பற்றி அறச்சீற்றம் கொள்ளாத அல்லது கொள்ளத் தெரியாத ஒரு அரசியல் வில(லா)ங்கு சித்தார்த்தன்.

த சித்தார்த்தன் யாழ் சமூகத்தை பிரதிபலிக்கின்ற சராசரி மனிதன். யாழ் சமூகத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலும் ஏதோ தாங்கள் உண்டுஇ தங்கள் வேலையுண்டு மற்றையவர்களிடம் கெட்டபெயரைச் சம்பாதித்துவிடக் கூடாது என்ற விழிப்புணர்வுடன் வாழ்பவர்கள். தங்களைச் சுற்றி என்ன அநீதிகள் நடைபெற்றாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள். அதனைத்தான் கடந்த கால ஆயுதப் போராட்டமும் மக்களுக்கு கற்றுக்கொடுத்தது. தட்டிக் கேட்பவர்களை கேள்வி கேட்பவர்களை ஆயுதம் தாங்கியவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் மட்டுமல்ல அரச ஊழியர்களுக்கும் கூட பிடிப்பதில்லை. அதனால் தான் யாழ் சமூகத்தில் என்ன விலைகொடுத்தும் மாற்றத்தை தடுத்துவிடவே முயற்சிப்பர். அந்தப் பின்னணியில் வந்தவர் தான் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

இவர் பொதுவெளிக்கு வந்திராவிட்டால் நானும் இந்த விமர்சனத்தை வைத்திருக்க வேண்டி வந்திராது. சராசரியாக உள்ள தமிழ் அரசியல் வாதிகளுக்குள் த சித்தார்த்தன் ஒப்பீட்டளவில் நேர்மையானவர் தான். அதனால் தான் ஒரு வாக்கு வங்கியயைத் தொடர்ந்தும் வைத்திருக்கின்றார். ஆனால் இவருடைய நேர்மை கடந்த பத்துவருடத்தில் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழ் மக்கள் பெற்றெடுத்திருக்க வேண்டிய அபிவிருத்தி விடயங்களை பெறுவதற்கு இவரைப் போன்றவர்கள் தடையாக இருந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக இவருடைய ஆசனத்தில் ஒரு செயற்திறன் மிக்கவர் சிவசக்தி ஆனந்தன் போல் ஒருவர் இருந்திருந்தால் இன்னும் பலதை மக்களுக்கு செய்திருக்க முடியும்.

அணமையில் டான் தொலைக்காட்சியின் ஸ்பொட் லைட் நிகழ்ச்சியில் கூட அவர் ஸ்பொட்டாக எதனையும் சொல்லவில்லை. மேலே குறிப்பிட்டதுபோல் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாகவே கருத்துத் தெரிவித்து உள்ளார். தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படவில்லை. மக்களால் தோற்கடிக்கப்பட்ட மாவை சேனாதிராஜாவுக்கு தேசியப்பட்டியலில் இடம்கொடுக்கவில்லை என்பது தான் அவருடைய ஆதங்கம். தமிழரசுக் கட்சி ஜனநாயகப்படி முடிவெடுக்கவில்லை என்பது உண்மைதான். சரி ஜனநாயகப்படி முடிவெடுத்தால் நீங்கள் ஏன் மக்கள் தங்கள் ஜனநாயகத்தின் மூலம் தோற்கடித்தவரை பின் கதவால் கொண்டுவர முற்படுகிறீர்கள். இதில் என்ன ஜனநாயம் இருக்கின்றது. தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறைத் தொகுதிக்கான பிரநிநிதித்துவமாக வழங்கியது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தன்னுடைய தேசியப் பட்டியல் ஆசனத்தை யாழ் குடாவில் உள்ள ‘குதிரை கழுதை’ களுக்கு வழங்கியது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நீங்களும் இன்னும் ஆனையிறவு தாண்டாத மனநிலையில் இருப்பது ஏன். உங்களைப் போல் இன்னுமொரு முதுகெலும்பற்றவர் கட்சிக்குள் இருந்தால் நீங்கள் இன்னும் கூடியகாலம் குப்பை கொட்டலாம் என்பதற்காகவா?

மேலும் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைக் கூட சித்தார்த்தனால் விளங்கிக்கொண்டிருக்க முடியவில்லை. ஓரிடத்தில் குறிப்பிடும் போது மக்கள் அரசுசார்பானவர்களுக்கு வாக்குகள் அளித்ததால் மக்கள் தேசியத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிடுகின்றார். இன்னுமொரு இடத்தில் குறிப்பிடும் போது மக்கள் தேசியத்துடன் தான் இருக்கிறார்கள் என்கிறார். நீங்கள் அங்கம் வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வாக்களிக்கக் காரணம் நீங்களும் உங்களைப் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதனையும் சாதிக்கவில்லை என்பதனாலேயே. ஏன் அதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு சமயத்தில் மக்கள் தவறாக தங்கள் வாக்குகளை அளித்துவிட்டார்கள் என்று கூறும் சித்தார்த்தன் மக்களுடைய வாழ்நிலை கடந்த பத்து ஆண்டுகளாக மேம்படாததற்கு தானும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ளாதவர் குறைந்தபட்சம் தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி எதனைச் சாதித்தேன் என்பதைக் கூறிப்பிட்டிருக்க வேண்டும்.

விருப்பு வாக்கு விடயம் பற்றிக் கேட்டபோது கூட ஒரு முதுகெலும்பற்ற பதிலையே சித்தார்த்தன் முன்வைக்கிறார். ஒரிடத்தில் விருப்பு வாக்கில் மோசடிகள் இடம்பெறுவதாக நம்பகரமாக தெரிய வருவதாகத் தெரிவிக்கின்றார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் ஆனால் நடந்திருக்கலாம் என்றும் சொல்கின்றார். அவருடைய நம்பகமான தகவல் எதுவென்றால் தன்னுடைய மிக நெருங்கிய நண்பருக்கு அவருடைய நண்பர் சொன்னதாகச் சொல்கிறார். இதெல்லாம் ஒரு நம்பகரமான தகவல் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பொது ஊடகத்தில் சொல்லுகின்றார் அதனைக் கேட்டு இரண்டு ஊடகவியலாளர்கள் ஆமாம் கொட்டுகின்றனர். விருப்பு வாக்கு மோசடிக்கு அவர் கொடுத்த உதாரணம் 2004இல் தமிழீழ விடுதலைப் புலிகள் தொலைபேசியூடாகவே விருப்பு வாக்குகளை மாற்றியதாக குறிப்பிடுகின்றார். 2004இல் புலியின்றி ஓரணுவும் அசையாது இருந்த போது விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டதையும் 2010ற்குப் பின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன் வாக்குகள் எண்ணப்பட்டதற்கும் வித்தியாசம் தெரியாத ஒருவர் இந்த அரசியலில் எதைத்தான் சாதிக்கப் போகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அரசியலில் இருந்தும் இல்லாத ஒருவராகவே அடுத்த ஐந்து ஆண்டுகளை வீணடிக்கப் போகின்றார். முடிந்தால் எனது கூற்றை அவர் பொய்யாக்கி விடட்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Alex Varma
    Alex Varma

    Seems time for all to retire…

    Reply