வட மாகாணத்தின் எதிர்காலத் தலைநகராக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வதென்றும் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலகத்தை மாங்குளத்தில் நிர்மாணிப்பது என்றும் அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மாங்குளம் தலைநகராக அபிவிருத்தி செய்யப்படுவது, வட மாகாண பிரதம செயலக வளாகத்தை மாங்குளத்தில் நிர்மாணம் செய்வது ஆகியன பற்றி பாரிய திட்டம் ஒன்றை சமர்ப்பிப்பது தொடர்பாக நிபுணத்துவ சேவைகள் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரும் விளம்பரங்களை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அரசாங்க பத்திரிகைகளில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தது.
தகுதி படைத்த நிபுணத்துவ சேவை நிறுவனங்களிடமிருந்து வட மாகாண சபையின் சார்பாக விண்ணப்பங்களைக் கோருவதாகவும் அமைச்சு விளம்பரம் மூலம் தெரிவித்துள்ளது. விரும்பும் நிபுணத்துவ சேவைகள் (Consultanly Services) நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை பெப்ரவரி 1 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்பாக திருகோணமலை, கன்னியா வீதியில் வரோதய நகரில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலகத்திற்குக் கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்குமாறு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எச்.பி.கஷியன் ஹேரத் விளம்பரத்தில் தெரிவித்துள்ளார்.