ஜோ பைடன் ஜனாதிபதியானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள்” டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை அதிகாரபூர்வ வேட்பாளராக அந்தக் கட்சி நேற்று அறிவித்தது.

துணை ஜனாதிபதி வேட்பாளராக தற்போது துணை அதிபராக இருக்கும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிட உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடனும், துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பும், மைக் பென்ஸும் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், முறைப்படி குடியரசுக் கட்சி இருவரையும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளராக நேற்றுதான் அறிவித்தது.

வரும் 27-ம் தேதி ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அப்போது ஜோ பிடன் இதற்கு முன் கூறிய குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுக்குப் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் மிகவும் பழமையான கட்சி என்று அழைக்கப்படும் குடியரசுக் கட்சி தன்னுடைய அறிவிப்பைக் காணொலி மூலம் நேற்று நடத்தியது. நார்த் கரோலினா நகரில் உள்ள சார்லோட்டி நகரில் சிறிய அளவிலான கூட்டம் மட்டுமே நடத்தப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் குடியரசுக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிதிகள் பங்கேற்று ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்பையும், துணை ஜனாதிபதி வேட்பாளராக மைக் பென்ஸையும் மீண்டும் தேர்வு செய்தனர். அப்போது நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியதாவது:

“நவம்பர் மாதம் நடக்கும் ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமெரிக்க வரலாற்றில் இருக்கும். இந்த தேசம் மிகக் கொடுமையான திசையில் செல்லப் போகிறதா?  அல்லது சிறந்த பாதையில் செல்லப்போகிறதா?  என்பதை முடிவு செய்யும் தேர்தல். எதிர்க்கட்சியினர் என்ன செய்கின்றனர் என்பதை என்னுடைய ஆதரவாளர்கள் சிறிது அமைதியாகக் கவனிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வாக்குகளைத் திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளார்கள். கடந்த முறை தேர்தலில் உளவு பார்த்தார்கள், இந்த முறை மின்னஞ்சல் வாக்குகளைத் திருட முயல்கிறார்கள். இது தேசத்துக்கே அவமானம்.

அவர்கள் இப்போது செய்யத் துணிந்திருக்கும் வாக்குகளைத் திருடுவது என்பது மிகவும் ஆபத்தானது. லட்சக்கணக்கான வாக்குகளைத் திருடுகிறார்கள். இருப்பினும் தேர்தலில் நான்தான் வெற்றி பெறுவேன்.
எங்களிடம் மிகப்பெரிய அளவுக்கு உற்சாகம் இருக்கிறது, சிறந்த முறையில் தேர்தல் பணியாற்றுவோம் எனும் சாதனை இருக்கிறது. ஆனால், குடியரசுக் கட்சியினரிடம் எந்தவிதமான உற்சாகமும் இல்லை.

நவம்பர் மாதம் தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்து ஜோ பிடன் ஜனாதிபதியானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள். கொரோனாவைப் பயன்படுத்தி தேர்தல் வெற்றியைத் தேடிக்கொள்ள ஜனநாயகக் கட்சியினர் முயல்கிறார்கள்.

சீனாவிலிருந்துதான் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியதை அமெரிக்க மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். நம்முடைய தேசம் ஒருபோதும் சோசலிஸ்ட் நாடாக இருக்காது”.

இவ்வாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *