ராஜீவ் காந்தி கேல் ரத்னா-2020 விருதுக்கு பாராலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் பெயர் தெரிவு !

இந்திய விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா-2020 விருதுக்கு பாராலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன், இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஆசிய விளையாட்டுகள் போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகாட், டேபிள் டென்னிஸ் சாம்பியன் மணிகா பாத்ரா, ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுந்தகம் சர்மா தலைமையிலான விருதுக்கான தேர்வு குழுவில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், சர்தார் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல, துரோனாச்சார்யா விருதுக்கு வில்வித்தை வீரர் தர்மேந்திர திவாரி, தடகள வீராங்கனை புருஷோத்தம் ராய், குத்துச்சண்டை வீரர் சிவ்சிங், ஹாக்கி வீரர் ரோமேஷ் பதானியா, கபடி வீரர் கிருஷண் குமார் ஹூடா, பாரா பவர் லிஃப்ட் வீரர் விஜய் பாலசந்திர முனிஷவர், டென்னிஸ் வீரர் நரேஷ் குமார், மல்யுத்த வீரர் ஓம் பர்காஷ் தாஹியா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

அர்ஜுனா விருதுக்கு 27 பேர், தியான் சந்த் விருதுக்கு 15 பேர் உள்பட மேலும் நான்கு பிரிவுகளுக்கு தேர்வான வீரர்களின் பெயர்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

விருதுக்கு தேர்வானவர்களுக்கு வரும் 29ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் காணொளி வாயிலாக விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும் என்று இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நேரத்தில் 5 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

2016ஆம் ஆண்டில் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, தீபா கர்மாக்கர், சாக்ஷி மாலிக் ஆகியோருடன் துப்பாக்கி சுடுதல் வீரர் ஜீத்து ராய்க்கு கேல் ரத்னா விருது கிடைத்தது.

இதேபோல, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோஹ்லி ஆகியோருக்கு பிறகு கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நான்காவது வீரராகியிருக்கிறார், ரோஹித் சர்மா.

1998 ஆம் ஆண்டில் கேல் ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ஆவார். 2007 ஆம் ஆண்டில் டி 20 உலகக் கோப்பைக்கு இந்தியாவை வழிநடத்திய பின்னர் தோனிக்கு அந்த கெளரவம் கிடைத்தது. அதே நேரத்தில் விராட் கோலி, 2018 ஆம் ஆண்டில் பளுதூக்குபவர் மீராபாய் சானுவுடன் விருதை வென்றார்.

இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறவுள்ள வினேஷ் போகாட் 2018 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையையும், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பாத்ரா 2018 ஆம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கத்தையும், ஆசிய விளையாட்டுகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்தையும் வென்றார்.

பிற செய்திகள்:

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *