ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக் காலத்தில் மலையகத்தில் நிறைவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். மலையகத் தோட்டப் புறங்கள் மாத்திரமன்றி, நகரங்களும் பாரிய அபிவிருத்தியடைந்து வருவதாக அமைச்சர் தொண்டமான் தெரிவித்தார்.
மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மலையகத்தில் மேற் கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக, கொழும்பிலிருந்து சென்ற செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ‘மக நெகும’ திட்டத்தின் கீழ் மலையகத் தோட்டப்புறப் பாதைகள் பல செப்பனிடப்பட்டுள்ளன. குறிப்பாக கரடுமுரடாகக் காட்சியளித்த பாதைகள் கொங்கிட் போட்டு புனரமைக்கப்பட்டுள்ளன. இதனால், நீண்ட காலத்திற்கு இந்தப்பாதைகள் சேதமடையாமல் பாதுகாக்கப்படும். அதே போன்று மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.
இளைஞர் வலுவூட்டல் அமைச்சின் மூலம் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மலையக இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்குக் கடன் பெற்றுக் கொடுக்கப்படுகிறது. இவ்வருடம் இளைஞர், வலுவூட்டல் அமைச்சுக்கென 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மேலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள திட்டங்களை வகுத்துள்ளோம்’ என்றும் அமைச்சர் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.