இரா. சம்பந்தனுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுகவீனம் – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பொறுப்புக்களில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது அக் கூட்டம் கூட்டப்படுவது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுகவீனம்  காரணமாகவே கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூடாது என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மற்றும் கொறடா தொடர்பான நிலைப்பாடுகள்  தொடர்பில் பாராளுமன்ற குழு கூட்டத்தில் முடிவெடுத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

மேலும் கூறுகையில்,

கூட்டமைப்பின் பேச்சாளராக என்னை நியமிப்பதாக பங்காளி கட்சித் தலைமைகளின் கூட்டத்தின் போதே முடிவு எடுக்கப்பட்டது. எனினும் பாராளுமன்றக் குழு கூட்டத்தின் போதே அது உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட வேண்டும்.  அது இன்னும் கூடவில்லை. அதன்போதே தெரிவுகளை மேற்கொள்ள முடியும்.

எனவே உத்தியோகபூர்வமான பேச்சாளர் என்று நான் இப்போது கூறமுடியாது. இந்தவாரம்  பாராளுமன்ற குழுக் கூட்டம் கூடுவதாக இருந்தது. எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளமையால் அது தாமதமாகியுள்ளது. எனவே கூட்டம் இடம்பெறும் போது அந்த தெரிவுகள் இடம்பெறும். அதில் எந்த பிரச்சினையும் இருக்கப்போவதில்லை என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *