தார்மீக பெறுமானங்களின் அபிவிருத்தியில்லாமல் நாடு முன்னேற்றமடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அபிவிருத்தி திட்டங்கள் பல மேற்கொள்ளப் பட்டுள்ள போதிலும் தார்மீக துறையின் அபிவிருத்தியற்ற முன்னேற்றத்தினால் எதிர்கால சந்ததியினருக்கு எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. நாட்டில் அபிவிருத்தியில் ஆன்மிக முன்னேற்றத்திற்கு சமபங்கு உண்டென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
2600 ஆம் ஆண்டு புத்த ஜயந்தி கொண்டாட்டங்கள் தொடர்பாக திட்டமிடுவதற்கென அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார். 2011 ஆம் ஆண்டில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. புத்தஜயந்தி கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக மகா சங்கத்தின் வழிகாட்டலுடன் நாட்டில் வாழும் பெளத்த மக்களின் ஒத்துழைப்புடன் மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது 2600 புத்தஜயந்தி கொண்டாட்டங்கள் பற்றி மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறினர். புத்தஜயந்தியை குறிக்கும் வகையில் அரசாங்கத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியொன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதம மந்திரி ரத்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.