சிங்கள அரசின் ஒரு இனச்சார்பான நகர்வுகளுக்கு எதிராக குரல்கொடுக்கக்கூடிய எவரும் தமிழ் இனவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் பிரபாகரனின் வாரிசுகள் என்றும் முத்திரை குத்தப்படுகின்றார்கள் ! – சுரேஷ்பிரேமச்சந்திரன்.

பிற தேசிய இனங்களின் அடையாளத்தையும் இருப்பையும் அச்சுறுத்துவதுதான் ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தின் நோக்கமா என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இந்து மத விவகாரம், அரச கருமமொழிகள் அமுலாக்கம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஆகிய அமைச்சுக்கள் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ் மொழி அரசகரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இதுவரை அது முழுமையாக நடைமுறையில் இல்லை என்பதும் அரசாங்கத்தினுடைய பல்வேறு திணைக்களங்களிலும் அமைச்சுக்களிலும் இன்னமும் தனிச்சிங்களத்திலேயே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. என்பதும் தமிழாசிரியர்கள் உட்பட பல அரச தரப்பினரும் இன்னமும் சிங்கள மொழியிலேயே கடிதங்களையும் சுற்றுநிரூபங்களையும் பெறுகிறார்கள் என்பதும் வெளிப்படையான உண்மை.

இவ்வாறான சூழ்நிலையில், தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சு அல்லது அரச கருமமொழி அமுலாக்கல் அமைச்சு என்பதை இல்லாமல் செய்தது என்பது, தான் விரும்பியவாறு தனிச் சிங்களத்தில் அரச கருமங்களை நடத்துவதற்கான ஓர் முயற்சியாகவே நாங்கள் கருதுகிறோம்.

அதனைப் போலவே, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக கடந்த அரசாங்கத்தில் பெயரளவிற்காவது தேசிய நல்லிணக்க அமைச்சு என்று ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. இன்று அதுவும் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும், இந்து சமய கலாசார அமைச்சோ, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்கள் தொடர்பான அமைச்சுக்களோ உருவாக்கப்படவில்லை என்பதும் இந்த அரசாங்கத்தினுடைய சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

பௌத்த சிங்கள வாக்குகளால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கமானது பத்தொன்பதாவது திருத்தத்தை மாற்றுவது, பதின்மூன்றாவது திருத்தத்தை மாற்றுவது, புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டு வருவது என்று பல்வேறுபட்ட கருத்துருவாக்கங்களில் ஈடுபட்டுவருகின்ற அதேசமயம், ஒரு குடும்ப ஆட்சியை உருவாக்கக்கூடிய வகையிலும் அந்த குடும்ப ஆட்சியினூடாக சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்தக்கூடிய வகையிலும் செயற்பட்டு வருகின்றது.

இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் அண்மைக்காலமாக எடுத்துவரும் ஒவ்வொரு முடிவுகளும் நடவடிக்கைகளும் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழித்தொழிக்கும் அடிப்படையிலும் அவர்களின் இருப்புக்களைக் கேள்விக்குள்ளாக்கும் அடிப்படையிலுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட தொல்பொருள் சின்னங்களை அடையாளமிடுவதற்கும் பாதுகாப்பதற்கும் முழுக்க முழுக்க பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையில் மூழ்கித் திளைக்கின்ற அதிகாரிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி செயலணியை உருவாக்கியதென்பது குறிப்பிடக்கூடியது.

வடக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதும் அதேபோன்று படையினர் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளைப் பலாத்காரமாக பறித்து வருவதும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயங்களாகும்.

அத்துடன், காலாதிகாலமாக செய்கை செய்யப்பட்டுவந்த வயல் நிலங்கள் உட்பட தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் மிகப்பெருமளவில் வனவளப் பாதுகாப்புக்கும் வனஜீவராசிகள் பாதுகாப்பிற்குமாக தான்தோன்றித்தனமான முறையில் பறிமுதல் செய்யப்படுவதையும் பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் தமது உயிர்ப்பாதுகாப்புக்கு அச்சப்படுவதற்கும் மேலாக, தமது வாழ்வாதாரங்கள், காணிகள், நிலங்கள் அனைத்தும் அவர்களின் கைகளைவிட்டுப் பறிக்கப்படும் ஒரு அச்சசூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கக்கூடிய எவரும் தமிழ் இனவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் பிரபாகரனின் வாரிசுகள் என்றும் முத்திரை குத்தப்படுகின்றார்கள்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவருமே சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான பல்வேறுபட்ட கொள்கைகளை வெளியிடுபவர்களாகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்று பேசுபவர்கள், இந்த நாட்டில் பல்வேறுபட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன, அவர்களுக்கான மத, கலாசார, பண்பாட்டு அடையாளங்கள் இருக்கின்றன என்பதுடன், அம்மக்களுக்கான பாரம்பரியம் மிக்க தேசவழமைச் சட்டங்களும் அவர்களது மதவிழுமியங்களைக் காப்பதற்கான சட்டதிட்டங்களும் இருந்து வருகின்றன.

அவை பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக பல இலட்சம் மக்களை இழந்து அவர்கள் போராடி வந்துள்ளனர் என்பதை மறந்து, அவ்வாறானவர்களின் கருத்துக்களைத் தூக்கியெறிந்து அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், இவர்கள் எதேச்சாதிகாரமாக நடப்பது என்பது இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் மேலும் மேலும் விரிசல்களை உருவாக்குவதற்கே உதவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *