இஸ்ரேலிலிருந்து முதல் நேரடி வணிக விமானம், ஐக்கிய அரபு தலைநகர் அபுதாபியில் தரையிறங்கியுள்ளது. இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையிலான விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானதன் பின்னணியில், நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் உயர்மட்ட உதவியாளர்கள் டெல் அவிவிலிருந்து ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கு நேரடி விமானத்தில் பயணம் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் வேண்டுகோளுக்கு ரியாத் ஒப்புக் கொண்டதையடுத்து விமானம் எல்.வை 971 சவுதி அரேபியா வான்பரப்பில் பறந்தது. சவுதி அரேபியா வான்பரப்பு வழியாக பறக்க இஸ்ரேல் விமானத்துக்கு அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
அபுதாபிக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய பிரதிநிதிகளை ஏற்றிச் செல்லும் விமானத்தில் ஆங்கிலம், ஹீப்ரு மற்றும் அரபு மொழிகளில் ‘அமைதி’ என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த 13ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3ஆவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது.
இதனிடையே தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரத்து செய்தது.
இதன் மூலம் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வர்த்தகம் செய்ய முடியும். மேலும் இது விமான போக்குவரத்து, வங்கி மற்றும் நிதி பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கான கதவுகளை திறந்து உள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகள் மீதான புதிய கோணத்திலான அரசியல் நகர்வாக இது பார்க்கப்படுகின்ற அதே நேரம் ஜனாதிபதி டொனால்ட்ரம்ப் அவர்களுடைய தேர்தலை மையப்படுத்திய அரசியல்நகர்வாகவும் இது பார்க்கப்படுகின்றது.