Tuesday, January 25, 2022

பிரபாகரன் அழிந்தால் இன்னும் பிரபாகரன்கள் தோன்றலாம் என்கின்றனர். ஆனால், அவ்வாறு தோன்றுவதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த மாட்டோம் – பாதுகாப்பு செயலர் கோதாபய

gothabaya.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இனிமேல் தப்பிவிட முடியாது . தண்டிக்கப்பட வேண்டியவர் நிச்சயம் தண்டிக்கப்படுவார். பயங்கரவாதிகளான புலிகளுக்காக குரல் கொடுப்பவர்கள் எவராக இருப்பினும் எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் அவர்கள் தேசத்துரோகிகளாவர். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு இந்தப் பேட்டியினை ரூபவாஹினி, நேத்ரா டிவி. தெரண, ஐ.டி.என் ஆகிய தொலைகாட்சிகள் நேரடியாக ஓளிபரப்பின. யுத்த நிலைவரம், அரசியல் நிலைமைகள், ஊடகங்கள் என பல விடயங்கள் தொடர்பாக தனது பேட்டியில் அவர் விளக்கமளித்தார். கோதாபய ராஜபக்ஷவின் பேட்டியின் சாரம்சம் வருமாறு

வடக்கில் முன்னெடுக்கப்படும் படை நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத புலிகள் தொடர்ந்து பின்வாங்கிச் செல்கின்றனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் பகுதியை தற்போது நெருங்கிக்கொண்டிருக்கிறோம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இனிமேல் தப்பிவிட முடியாது.

எந்தவேளையிலும் பிடித்தே தீருவோம். தண்டிக்கப்பட வேண்டியவர் நிச்சயம் தண்டிக்கப்படுவார். பயங்கரவாதிகளான புலிகளுக்காக குரல் கொடுப்பவர்கள் எவராக இருப்பினும் எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் அவர்கள் தேசத்துரோகிகளாவர். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. பயங்கரவாதத்தை முற்றுமுழுதாக தோற்கடித்து இலங்கையை ஒரே நாடாக மாற்றியமைப்பது மட்டுமே எமது ஒரே இலக்கு. இதைவிட்டு சில்லறைத்தனமான விடயங்களில் ஈடுபாடு காட்டுவது அர்த்தமற்றது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிராவிட்டால் இலங்கை இரண்டாகப் பிளவுபட்டு தமிழீழம் உருவாகியிருக்கும். ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பல்வேறு சவால்களையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டு நாட்டை ஒரு பாரிய யுத்த வெற்றிக்குக் கொண்டுசென்றிருக்கின்றார். ஜே.ஆர். முதல் சந்திரிகா வரை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தற்போது எமக்கு வெற்றி கிட்டியதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதலாவது படையினரின் தியாகமாகும். போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்கின்றனர். இதுவே வெற்றியின் அடிப்படை ஆகும்.

இது தவிர ஜனாதிபதியின் தலைமைத்துவமும் மிக முக்கியமான காரணியாகும். ஜனாதிபதிக்கு தேசிய சர்வதேச மட்டத்திலிருந்து பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. பொருளாதார ரீதியிலும் பல சவால்களுக்கும் அவர் முகம்கொடுத்தார். ஆயுதங்களை கொள்வனவு செய்வதிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இந்த சவால்களுக்கு முகம்கொடுத்து சிறப்பானதொரு அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்திருந்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் சீனா, பாகிஸ்தான் ஜனாதிபதிகளுடன் பலமுறை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். அதன் மூலம் கிடைத்த உதவி ஒத்துழைப்புகளினால் தான் இந்த வெற்றியை அடைய முடிந்தது.
இராணுவத்தினர் பெற்றிருக்கும் இந்த வெற்றியின் மூலம் உலகத்தையே கவர்ந்திருக்கின்றனர்.

உலகத்திலேயே சிறந்த இராணுவத் தளபதியை இலங்கை கொண்டுள்ளது என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராணயன் என்னிடம் ஒரு தடவை தனிப்பட்ட முறையில் பாராட்டியுள்ளார். இராணுவத்தின் தலைமைத்துவம். அதுவும் மிக முக்கியமானதாகும். இராணுவத் தளபதியின் பொறுப்பு தேர்ச்சி அனுபவங்கள் இத்தருணத்தில் இன்றியமையாதவை.தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போராட்டங்களில் பெற்ற வெற்றிகளுக்கு தரைப்படையினரின் பங்களிப்பு அளப்பரியது. இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மிகவும் சரியான யுக்திகளைக் கையாண்டு எதிரிகளை அழித்து வருகின்றார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்த நாம் இந்த இடத்திற்கு சென்றமை குறித்த காரணங்களை வரிசைப்படுத்த முடியாது. எனினும் யுத்த களத்தில் உயிரைத் தியாகம் செய்து சமாதானம் மலரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் போராடுகின்ற இராணுவ வீரர்களை மறந்துவிட முடியாது. அதுவே இந்த வெற்றியின் அடிப்படை காரணமாகும்.

 ஆயுதம் முக்கியமல்ல வெற்றிக்கு ஆயுதம் முக்கியமல்ல. அந்த ஆயுதத்திற்குப் பின் நிற்கின்ற மனிதனே முக்கியமானவனாவான். அந்த மனிதனுக்கு தைரிய மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும். அதனை நாம் திறம்பட செய்து கொண்டிருக்கின்றோம். அதனால்தான் இவ்வாறான தொடர் வெற்றிகளை பெற முடிந்தது.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படகுகளை எதிர்கொண்டவிதம் குறித்து இலங்கை கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளருடன் அரை மணிநேரம் கலந்துரையாடுவதற்கு இஸ்ரேலிய கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
“பொதுமக்களுக்குக் குறைந்தளவு பாதிப்பை மாத்திரம் ஏற்படுத்தி இலக்கைத் துல்லியமாகத் தாக்குவதில் தலைசிறந்த இலங்கை விமானப்படை உலகிலேயே சிறந்த விமானிகளைக் கொண்ட படை” என்பதே எனது கருத்தாகும்.

பிரபாகரன் சிறந்ததொரு யுத்தத்தை முன்னெடுக்கக் கூடியவர். அவரை யுத்தத்தின் மூலம் வெல்லமுடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண சமாதான பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே முடியும். எனவே புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டுமென பல தரப்புகளிடமிருந்தும் தொடர்ச்சியாக எமக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அதனையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். புலிகளுடன் யுத்தம் செய்ய வேண்டாமென்று சர்வதேச நாடுகள் பலவும் கூட ஜனாதிபதி அவர்களுக்கு பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்தன.புலிகள் மீது கை வைத்து அவார்களைத் தோற்கடிக்க முடியாது என்றும் புலிகள் 30 வருட காலமாகவுள்ள பலமான ஒரு அமைப்பு என்றும் அந்த நாடுகள் வலியுறுத்தின.அது மாத்திரமன்றி பொருளாதார ரீதியாகவும் எமக்கு சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிட்டது.சில நாடுகள் யுத்தம் செய்வதற்குத் தேவையான ஆயுதங்களை எங்களுக்கு விற்பனை செய்யவும் மறுத்தன.அவ்வாறான நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொண்டபோதும் இந்நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் உறுதியுடன் செயற்பட்ட ஜனாதிபதி அவர்கள் அந்த நோக்கில் முன்வைத்த காலை எந்தக் கட்டத்திலும் பின் வைக்கத் தயாராக இருக்கவில்லை.

விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது ஒரு சர்வாதிகாரியின் பயங்கரவாத இயக்கமாகும். தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் கொன்றொழித்த தலைவனே இந்த சர்வாதிகாரி. தனக்கு அடுத்த தளபதியைக் கூட தலைதூக்கவிடாத சர்வாதிகாரியாகவே பிரபாகரன் செயற்பட்டார்.

இவ்வாறான நிலையில் முல்லைத்தீவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் போராடிவரும் எமது இராணுவத்தினர் தொடர்ச்சியாக தாய்நாட்டை வெல்ல வைப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.வடக்கில் முன்னெடுக்கப்படும் படை நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத புலிகள் தொடர்ந்து பின்வாங்கிச் செல்கின்றனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் பகுதியை தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறோம். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை இன்னும் சில நாட்களுக்குள் எமது இராணுவத்தினர் கைது செய்து விடுவார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் நாட்டைவிட்டு தப்பியோடாவிட்டால் நிச்சயமாக அவரைக் கைதுசெய்ய படையினரால் முடியும். அதே நேரம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பான ஓர் இடத்திற்கு தப்பிச் சென்று விட்டால் அங்கிருந்து போராட்டத்தை முன்னெடுக்கக் கூடும். ஆனாலும் அவர் இதுவரை இலங்கைக்குள் இருந்து கொண்டிருப்பாராயின் இனி பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டாலும் எந்தக் கட்டத்திலும் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல முடியாது.

பிரபாகரனை உயிரோடு பிடிப்பது அல்லது அழிப்பது எமக்கு முக்கியமானதாகும். சிறியதொரு பதுங்குக் குழிக்குள் பிரபாகரன் ஒளித்துக் கொண்டுள்ளார். அவரால் இனிமேல் தப்பிச்செல்ல முடியாது. எந்தவேளையிலும் பிரபாகரன் பிடிபடுவார். வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையின் போது வல்வெட்டித்துறையில் பிரபாகரன் சிக்கிக் கொண்டார். அவ்வேளையில் அவர் சயனைட் உட்கொள்வதற்கு முற்பட்டாலும் சிறிய இடைவெளியில் முல்லைத்தீவுக்கு தப்பியோடிவிட்டார். அந்த குறுகிய காலத்திற்குள் அவரது மனநிலை மாறிவிட்டது. தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் சைனட்டை உற்கொள்வதா இல்லையா என்ற மனோ நிலையிலேயே பிரபாகரன் இருந்து கொண்டிருக்கின்றார். வடக்கில் முன்னெடுக்கப்படும் படை நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத புலிகள் தொடர்ந்து பின்வாங்கிச் செல்கின்றனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் பகுதியை தற்போது நெருங்கிக்கொண்டிருக்கிறோம். எமது தூரநோக்கத்துடனான இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்காவிடின் பிரபாகரன் அந்த சமாதான நடவடிக்கையை மீண்டும் குழப்பி விடுவார்.

பிரபாகரன் அழிந்தால் இன்னும் பிரபாகரன்கள் தோன்றலாம் என்கின்றனர். உண்மை தான்.  ஆனால், அவ்வாறு தோன்றுவதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த மாட்டோம். திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அனைத்தும் முடிந்து விட்டது எனக் கருதிவிடவும் முடியாது. பிரபாகரனோ அல்லது இன்னொருவரோ இந்த வெற்றியை தட்டிப்பறிக்க இடமளிக்க முடியாது. இந்த யுத்தம் இறுதி வரை முன்னெடுக்கப்படும்.புலிகள் மீண்டும் வெகுண்டெழ வேண்டும் என்பதே புலி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால் நாங்கள் புலிகளை மீண்டும் தலைதூக்க விடமாட்டோம்.

படையினர் நிலங்களை மீட்பதன் மூலம் எவ்வாறான வெற்றியையும் அடைய முடியாதென சிலர் தெரிவித்தனர். எனினும், பிரபாகரன் தனது அதிகாரத்தின் கீழ் கிளிநொச்சியில் வங்கி, பொலிஸ், நீதிமன்றம் போன்றவற்றை நிர்வகித்து வந்தார். அந்த நிர்வாகத்தைச் சீர்குலைக்க முடியாதெனவும், கிளிநொச்சியைக் கைப்பற்ற முடியாதெனவும் எமது தலைவர்கள் நினைத்திருந்தனர். தொடர்ச்சியாக பின்வாங்கினார்கள்.

இன்று புலிகளுக்காகப் பேசுபவர்களே அன்று அவர்களைப் பாதுகாத்தனர். புலிகளுக்கும் எமக்கும் எந்த உடன்படிக்கையும் கிடையாது. நாட்டைக்காட்டிக் கொடுப்பவர்கள் நாமல்ல. துரோகிகளை நாடு விரைவில் கண்டு கொள்ளத்தான் போகிறது.

ஒரு சிலர் பாராளுமன்ற உறுப்பினர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றமையாலேயே அரசாங்கம் யுத்த வெற்றிகளைப் பெற்றதாக கூறுகின்றனர். கருணாவைப் பிரித்ததன் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றால் ஏன் அன்றைய அரசாங்கம் இந்தப் புத்திசாதுரியமான நடவடிக்கையைச் செய்யவில்லை ?

கருணா குழுவின் உறுப்பினர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. அதனை ஏன் அவர்கள் செய்யவில்லை.யுத்த நிறுத்த காலத்திலேயே கருணா பிரிந்து வந்தார்.அதனாலேயே புலிகள் பலமிழந்தனர் என்பதை என்னால் ஏற்க முடியாது.ஏனெனில் யுத்த நிறுத்த காலத்திலேயே புலிகள் அதிகளவான ஆயுதங்களை வாங்கிக் குவித்தனர்.அதைக் கருணாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.நாம் கிழக்கை மீட்டதைத் தொடர்ந்து அங்கு கைப்பற்றிய ஆயுதங்கள் அனைத்தும் யுத்த நிறுத்த காலத்தில் புலிகள் கொள்வனவு செய்த ஆயுதங்கள்தான்.

மங்கள சமரவீரவும் நாட்டுக்கு துரோகியாக மாறிவிட்டார். படைத்தரப்பு இழப்புகள் பற்றிய கணக்குக்காட்டி வருகின்றார். 11 வருடங்கள் அவரும் அமைச்சராக இருந்தவர். அவர் அமைச்சுப்பதவி வகித்த 2000ஆம் ஆண்டில் 2,248 படையினர் பலியானார்கள். அதற்கு அவரும் பொறுப்புக்கூறியாக வேண்டும். முல்லைத்தீவு, ஆனையிறவு, மாங்குளம், கிளிநொச்சி என அனைத்தும் அன்று அவர் அமைச்சராக இருந்தபோதே வீழ்ச்சி கண்டன.

மூன்று வருடங்களுக்கிடையில் இன்று அவை அனைத்தையும் மீட்டெடுத்துள்ளோம். இதுதான் எமது படைவீரர்களின் தியாகத்துக்குக் கிடைத்த வெற்றி. யாழ்.குடாநாட்டை முழுமையாக மீட்டு விட்டோம். கிளிநொச்சி, பரந்தன், பூநகரி அனைத்தையும் வென்றுவிட்டோம். அடுத்த எந்த நிமிடத்திலும் முல்லைத்தீவும் கைப்பற்றப்படும்.

பிரபாகரனை தப்பிச் செல்ல இடமளிக்கப் போவதேஇல்லை. பிரபாகரனை பிடிப்பது உறுதியானது பிடிபட்டதும் எவருக்கும் கையளிக்கும் எண்ணம் எமக்குக்கிடையாது. ஜனாதிபதி என்ன செய்வாரோ எனத் தெரியாது. ஆனால் நாம் எடுத்திருக்கும் முடிவு பிரபாகரன் தண்டிக்கப்பட வேண்டும். எமது நாட்டில் தூக்கிலிடப்படவேண்டும் என்பதேயாகும். அதனைச் செய்ய எமக்கு உரிமையுண்டு. அவர் மாபெரும் கொலைக்குற்றவாளி. 200 வருடங்களுக்கு சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பவர். இந்தியாவிடம் கையளித்துவிட்டு எம்மால் ஆறுதலடைய முடியாது.
 
எமது நாட்டின் ஊடகங்கள் நடந்து கொள்ளும் முறை வேதனைதரக்கூடியதாகவே உள்ளது. நேர்மையாக நடக்க வேண்டிய ஊடகங்கள் துரோகத்தனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில முக்கிய ஊடகங்கள் புலிகளுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. “சிரச’ ஊடகத்தை யார் தீ வைத்தனர். அவர்களே செய்துள்ளனர். காப்புறுதிபெறவும், இன்னொருதரப்புக்கு அரசியல் இலாபம் தேடவுமே அப்படிச் செய்தனர். உலகில் எங்குமில்லாத வகையில் இலங்கையில் ஊடகங்கள் தவறான வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டில் எந்த ஊடகத்தையும் விட எமது பாதுகாப்புத் தரப்பு இணையத்தை 6 மில்லியன் மக்கள் நாள்தோறும் பார்க்கின்றனர். எமது நாட்டு ஊடகங்கள் பெரும்பான்மையாக புலிகளுக்குத்துணைபோவதாகவே உள்ளன. சிரச தீவைப்பு தொடர்பாக ஒரு ஊடகவியலாளர் “சி.என்.என்.’னுக்கு பேட்டியளித்து அதனை அரசுதான் செய்ததாகக் கூறியுள்ளார். உண்மையை வெளிக்கொண்டு வந்ததும் முதல் வேலை அந்த ஊடகவியலாளரைப்பிடித்து சிறையில் அடைப்பதுதான்.

புலிகளை தாமதமாகியே தடைசெய்துள்ளோம். ஆனால், நான் எப்போதே தடை செய்து விட்டேன். பிரபாகரனைப் பிடிக்க திட்டமிட்ட அன்றே நான் புலிகள் மீது தடையை போட்டுவிட்டேன். பிரபாகரனை பிடிக்காதவரை நான் நித்திரை கொள்ளமாட்டேன். அந்த நல்ல செய்தி எந்த நேரத்திலும் எமதுகாதுகளில் விழத்தான் போகிறது. இலங்கை விடயத்தில் புதுடில்லி அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காது. அங்கு புத்திசாதுர்யமான தலைவர் இருக்கின்றார். இந்தியா எடுத்திருக்கும் முடிவு சரியானது, நியாயமானது.

ஒரு குழு சொல்வதற்காக இந்தியா அவசரப்பட்டு மூக்குடைபட்டுக் கொள்ளமுற்படமாட்டாது. அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட புலிகளுக்காகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. உள்ளூர், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தமிழ் மக்களுக்கென்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான பணத்தை புலிகளுக்கு வழங்கியுள்ளன. வடக்கிலோ, கிழக்கிலோ அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்த அபிவிருத்தி எதுவுமே கிடையாது. முழுவதும் புலிகளுக்கே சேர்க்கப்பட்டுள்ளன.

யார் என்ன சொன்னாலும் அரசாங்கத்தின் பயணத்தில் எந்த விதமான மாற்றமும் நிகழாது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்த நாம் இந்த இடத்திற்கு சென்றமை குறித்த காரணங்களை வரிசைப்படுத்த முடியாது. எனினும், யுத்த களத்தில் உயிரைத் தியாகம் செய்து சமாதானம் மலரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் போராடுகின்ற இராணுவ வீரர்களை மறந்துவிட முடியாது. அதுவே இந்த வெற்றியின் அடிப்படை காரணமாகும். இலக்கு நோக்கிய பயணத்தில் வெற்றிக்கம்பம் வரை செல்வோம். மக்களுக்கான பயணமே அரசின் பயணம். காட்டிக் கொடுப்பவர்களுக்கோ, பச்சோந்திகளுக்கோ பயந்து நாம் ஒதுங்கப் போவதில்லையென்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

8 Comments

 • kamal
  kamal

  /பிரபாகரன் அழிந்தால் இன்னும் பிரபாகரன்கள் தோன்றலாம் என்கின்றனர். உண்மைதான்./
  ஆனால் தமிழ் ரோபோக்களை செய்து விட்டுத்தான் இனிப் போராட்டம் செய்யலாம்

  Reply
 • ashroffali
  ashroffali

  ஒரு பிரபாகரனிடம் பட்ட அனுபவமே தமிழ் மக்களுக்கு பல தசாப்தங்களுக்கு நினைவிலிருந்து அழிய மாட்டாது. அதற்கிடையில் இன்னொரு பிரபாகரனுக்கு எந்தக் கட்டத்திலும் ஆதரவு வழங்க மாட்டார்கள். இனி வரும் காலங்களில் தமிழ் மக்களின் மத்தியில் செயற்படும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களும் தங்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுகளை தற்காலிகமாகவேனும் ஒதுக்கி வைத்து விட்டு அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பில் மும்முரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கான ஆதரவுத் தளத்தையும் யுத்தத்தால் சீரழிந்த தமிழர் பிரதேசங்களை மீள் கட்டமைப்பதற்கான ஒத்தாசைகளையும் புலம் பெயர் தமிழர்கள் வழங்க வேண்டும். வடக்கும் தெற்கும் ஒன்றாக இணைந்து நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரு நன்னாள் மலர வேண்டும். யாழ் தேவி இரயிலில் மூவினத்தவர்களும் ஒன்றாக கூடிக்குலவி பயணிக்கும் இனிமையான காலம் மீண்டும் மலர வேண்டும். மலரும். அதற்கான எமது ஆதரவையும் ஒத்தாசையையும் வழங்குவது நம்மனைவரினதும் கடமை.

  Reply
 • anathi
  anathi

  கோத்தபாய வாய்ப்பந்தல் போடுகிறார். அப்படி பிரபாகரன்கள் தோன்றக் கூடாது என்றால் இவர்கள் என்ன செய்திருப்பாகள்? மக்கள் ஏற்கக் கூடிய தீர்வுக்கல்லவா முயற்சி செய்திருப்பார்கள். சிங்கக் கொடியை பதிலுக்கு எமக்கு திணிப்பார்களா? யுத்தத்திற் பிறகு தான் தீர்வு பற்றியே கதை என்பதற்கு என்ன அர்த்தம்?

  Reply
 • lavan
  lavan

  பிரபாகரன் அழிந்தால்லும் பிரச்சனை தீருமோ தீரதோ தெரியாது ஆனல் மக்களுக்கு நின்மதி கிடைக்கும்.

  Reply
 • rooto
  rooto

  அதுதான் பிரபாகரன் அழிந்தால் அஸ்ரப் அலி போல் பல சமூக சேவையாளகள் தோண்றுவார்கள். அவர்கள் உயிருக்கு பயந்ட்கு யாரிடமும் காசு வாங்காமல் பொதுநலத்தொண்டு செய்வார்கள். பல கருணாக்கள், பிள்ளையாஙள் உருவாகி தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள், ஆனந்த சங்கரியரும், டக்கிளஸ்ஸும் சேர்ந்து வடக்கையும் கிழக்கையும் மக்கள் ஆட்சியில் ஆளுவார்கள்,
  தவிர ஐராவதம், புட்பகவிமானம் போன்ற வாகனங்களும், பிரம்மா,விஸ்னு, சிவன்,தெவெந்திரன் போன்றவர்களும் இவ் ஐக்கிய சோசலிச ஜனநாயக குடியரசை வாழ்த்துவார்கள்!!!

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  கோதாபய ராஜபக்ஷ ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு சரியான ஒரு தீர்வை வழங்க தற்போதய அரசு முன்வந்தால் பின் பிரைச்சினைகள் எப்படி உருவாகும். அதைவிடுத்து புலிகளுக்கு காட்டிய இராணுவத் தீர்வை தமிழ் மக்கள் மீதும் திணிக்க முயன்றால் என்றும் சிங்கள அரசு நிம்மதியாக இருக்க முடியாது.

  Reply
 • Unmai
  Unmai

  தனி ஈழம் தான் தீர்வு

  Reply
 • rooto
  rooto

  தனி ஈழம் தரேல்லாது!! என்ன செய்வீங்க?? நாங்க இணைந்த ஐக்கிய சோசலிச ஜனநாயக குடியரசுக்குள்ளதான் தீர்வு!! அதுவும் சிங்களம்தான் அரச கரும மொழி, ஏலுமெண்டா எதாவது செய்யுங்கோ பாப்பம்!!

  Reply