முக்கியமாக தேவைப்படும் பொரு ட்களுக்கான ஜனாதிபதி ட்ரம்பின் சலுகை மற்றும் COVID-19 இற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவுதலின் அடிப்படையில் வழங்கப்படும் 200 புத்தம் புதிய அதிநவீன வென்டிலேட்டர்களை (மூச்சு க்காற்றூட்ட கருவி) சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது. இந்த வென்டிலேட்டர்களானது இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸினால் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளிக்கப்பட்டன.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த வென்டிலேட்டர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. அவை கச்சிதமானவை மற்றும் எளிதாகப் பயன்படுத்தக் கூடியவை என்பதுடன், இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இலங்கைக்கு நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும்.
இலங்கையர்களின் நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் அமெரிக்கா நீண்டகால உறுதிப்பாடொன்றைக் கொண்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா இலங்கைக்கு 26 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான சுகாதார உதவிகளை வழங்கியுள்ளது.
எமது நீடித்த உதவியானது அமெரிக்க மக்களிடமிருந்தான இன்னுமொரு அன்பளிப்புடன் தொடர்கிறது.
அமெரிக்க புத்தாக்கங்கள் மற்றும் தனியார் தொழில்துறையின் சக்தியை பயன்படுத்துவதன் மூலம், COVID-19 இற்கு எதிராக போராடுவதற்கும் உயிர்களை காக்க உதவுவதற்கும் இந்த அதிநவீன வென்டிலேட்டர்களை இலங்கைக்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், என்று தூதுவர் டெப்லிட்ஸ் தெரிவித்தார்.
COVID-19 தொற்றுப் பரவலினால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முக்கியமான சேவைகளை வழங்கிய இலங்கைக்கான 6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான COVID-19 உதவிக்கு மேலதிகமானதாகவே இந்த வென்டிலேட்டர் அன்பளிப்பு அமைந்துள்ளது.