இந்தியாவில் பப்ஜி, கட் கட், பைடு, ரைஸ் ஒஃப் கிங்டொம் உட்பட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஏற்கனவே, 58 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (புதன்கிழமை) மேலும் 118 செயலிகளுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69-A இன் கீழ் சீன செயலிகள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
லடாக் எல்லையில் நடைபெற்ற இந்திய-சீன இராணுவ மோதலைத் தொடர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் இந்தியா முழுவதும் வலுத்துவருகிறது.
இதன் ஒரு கட்டமாக டிக்டொக் உள்ளிட்ட 58இற்கும் மேற்பட்ட செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்திருந்தது. இந்நிலையில், மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த செயலிகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் குறித்த செயலிகள் மீது ஏராளமான முறைப்பாடுகள் தொடர்ச்சியாக வந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற வகையில் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு இந்தியாவுக்கு வெளியேயுள்ள இலத்திரனியல் சேமிப்பகத்தில் சேமிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது