சீனா அதன் அண்டை நாடுகளைத் துன்புறுத்துகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைக் பாம்பியோ கூறுகையில், “தனது சொந்த மக்களை அடக்குவதற்கும், அதன் அண்டை நாடுகளைத் துன்புறுத்துவதற்கும் சீனா முயல்கிறது. உள்நாடு மற்றும் சர்வதேச விவகாரங்களில் சீனாவின் ஆக்ரோஷம் கவலைக்குரியது. இதனை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்தியா – சீனா எல்லை மோதல் விவகாரத்தில், இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா- சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அண்டை நாடுகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென் சீனக் கடல் பகுதிக்கு அமெரிக்கா 2 போர்க் கப்பல்களை அனுப்பி ஜூலை மாதம் பயிற்சியில் ஈடுபட்டது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தென் சீனக் கடல் பகுதியில் 2 ஏவுகணைகளைச் செலுத்தி போர்ப் பயிற்சி மேற்கொண்டது சீனா. இதன் காரணமாக தென் சீனக் கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.