பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவித்து வரும் நிலையில், எந்த முடிவை எடுக்கவும் இந்தியா தயாராக உள்ளது. கடைசி சான்ஸாக தாக்குதல் நடத்தவும் ராணுவம் தயார் என்று இந்திய ராணுவ தளபதி தீபக் கபூர் தெரிவித்துள்ளார்.
ராணுவ உயர் அதிகாரிகளுடன் ராணுவ தளபதி தீபக் கபூர் நேற்று ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் இதுகுறித்து பீதியைக் கிளப்ப தேவையில்லை.
பாகிஸ்தான் தனது பழங்குடி மாகாண எல்லையிலிரு்நது படைகளை கிழக்குப் பிராந்தியத்திற்கு (இந்தியாவுடனான எல்லைப் பகுதி) அனுப்பும் என எதிர்பார்க்கிறோம். தற்போது அவர்கள் கிழக்குப் பகுதி நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இதை இந்திய ராணுவம் ஏற்கனவே உணர்ந்துள்ளது. அவர்களின் திட்டத்தையும் நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். இருப்பினும் இப்போதைக்கு பயப்படும்படியாக எதுவும் இல்லை.
இருப்பினும் இந்தியா அனைத்து வாய்ப்புகளையும் எதிர்நோக்கியுள்ளது. தூதரக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் அதை இந்தியா சமாளிக்கும். அதேசமயம், கடைசிக் கட்டமாக தாக்குதல் வாய்ப்பையும் நாங்கள் மனதில் வைத்துள்ளோம். ஆனால் அது கடைசிக் கட்டம்தான் என்றார் கபூர்.