உயிரித்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் சில குழுக்கள் தொடர்ந்தும் இஸ்லாமிய தீவிரவாத சொற்பொழிவுகளை நடாத்தி வருவதாக இஸ்லாமிய மதகுரு ஒருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (02.09.2020) சாட்சியம் அளித்துள்ளார்.
தாக்குதலுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கு மட்டுமே தடை விதித்திருந்தாலும், மேலும் ஏழு தீவிரவாத அமைப்புகள் நாட்டில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் சாட்சியமளித்தார்.
அந்த இஸ்லாமிய மத குருவின் பெயர் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.
ஆணைக்குழுவில் தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர், தான் நாட்டில் ஒரு பாரம்பரிய முஸ்லிம் என்றும், வஹாபிசத்திற்கு எதிராக சொற்பொழிவுகளை நடத்துவதால் வஹாபிசவாதிகளால் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும் கூறினார். 1991 ஆம் ஆண்டில், தான் புனித மக்காவிற்று சென்ற போது விமானத்தில் தன்னுடன் பயணித்த முஸ்லிம்களுக்கு பாரம்பரிய இஸ்லாமிய போதனைகள் குறித்து தெளிவுப்படுத்தியதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஒரு குழு கூர்மையான ஆயுதங்களால் தன்னை தாக்கியதாகவும் அவர் தெரித்தார்.
அதேபோல், 1994 ஆம் ஆண்டில் தவடகஹ பள்ளிவாசலில் பிரசங்கித்த போது வஹாபிகள் குழுவினரால் தாக்கப்பட்டதாக கூறிய அவர், மேலும் தான் அக்கரைப்பற்று பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளானதாகவும் கூறினார்.
மேலும் சாட்சியமளித்த அவர், குர்-ஆனில் இஸ்லாத்தின் ஆரம்பகால போதனைகளில், முஸ்லிம் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பதில் நேரடி சட்டம் ஒன்று இல்லை என்றும், ஆனால் சில முஸ்லிம் பெண்கள் தமது கௌரவத்தை பாதுகாக்க மட்டுமே அதனை அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால் பிற்காலத்தில் பாரம்பரிய முஸ்லிம் பெண்கள் தமது தலையை மறைக்க ஆசைப்பட்டாலும், தற்போது முகத்தை முழுவதுமாக மூடி, உடலை முழுவதுமாக கருப்பு உடையால் மூடுவதானது முற்றிலும் தீவிரவாத கொள்ளைகளுக்கு உட்பட்டது எனவும் கூறினார்.
இதன்போது அமைச்சின் முன்னாள் செயலாளரும், ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினருமான ஒரு பிரதநிதி பேருவளையில் உள்ள ஜமியா நலிமியா என்ற பல்கலைக்கழகத்தைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? என விசாரித்தார்.
அதற்கு பதிலளித்த அவர், அது குறித்து தனக்கு நன்கு தெரியும் என்றும் அதேபோல் அந்த கல்வி நிறுவனத்தில் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எதிரான போதனைகள் அங்கு இடம்பெறுவதாகவும் கூறினார்.
இதன்போது ஆணைக்குழுத் தலைவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரும் நாட்டில் தீவிரவாத உரைகள் நடைபெறுகிறதா? வினவினார்.
இதற்கு பதிலளித்த அவர், பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், சில குழுக்கள் இன்னும் தீவிரவாத பிரசங்கங்களை நடத்தி வருவதாகவும், அவர்கள் வஹாபி சித்தாந்தங்களை நாட்டில் பரப்புவதாகவும் கூறினார்.
வஹாபிசத்தை பரப்புவதற்கு சவூதி அரேபியாவிலிருந்து உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தாக்குதலுக்குப் பின்னர் அரசாங்கம் அது குறித்து கவனஞ்செலுத்துவதால் வேறு வழிகளில் அந்த நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த மதகுரு கூறினார்.
எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நாட்டிலிருந்து தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான வாய்ப்பு இருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த பிழையான முடிவால் அது சாத்தியப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
நாட்டில் ஒன்பது இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வந்தாகவும், முன்னாள் ஜனாதிபதி அவற்றில் இரண்டை மட்டுமே தடை செய்துள்ளதாகவும், மற்ற ஏழு குழுக்கள் இப்போதும் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.
தவ்ஹீத் ஜமாத், தப்லீ ஜமாஅத், சலாபிகள் மற்றும் குரா சபா போன்ற குழுக்களும் இன்னும் தீவிரவாதத்தை பரப்புகின்றன என்று அவர் மேலும் கூறினார்.