நாட்டுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்காக அமைச்சர்கள் உள்ளடங்கலாக அரச உத்தியோகஸ்தர்கள் அனைவரும் ஒவ்வொரு புதன்கிழமையும் தத்தமது அலுவலகங்களிலேயே இருக்கவேண்டும் என்றும் அன்றைய தினம் வேறு வேலைகளுக்காகச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்கான நேரம் போதுமானதாக இல்லை என்றும் அமைச்சரவை உபகுழுவின் பணிகள் உள்ளடங்கலாக தினமும் பல்வேறு வேலைகள் இருப்பதாகவும் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்தே மக்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிவதற்காக நாளொன்றை ஒதுக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இனிவரும் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்களின் முறைப்பாடுகளைக் கேட்டறிவதற்கு ஒதுக்கப்படுவதுடன் அன்றைய தினம் அமைச்சர்கள் உள்ளடங்கலாக அனைத்து அரச உத்தியோகஸ்தர்களும் தத்தமது அலுவலகங்களில் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.