உலகம் முழுவதும் சுமார் 7,000 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச தன்னார்வ அமைப்பான ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆம்னெஸ்டி வெளியிட்ட அறிக்கையில், “கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 7,000 சுகாதாரப் பணியாளர்கள் பலியாகி உள்ளனர். அனைத்து அரசாங்கங்களும் சுகாதாரப் பணியாளர்களைக் கதாநாயகர்கள் என்று பாராட்டியுள்ளன. ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டன” என்று தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால்,கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். ஐரோப்பிய நாடுகளில் மாணவர்களுக்குப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.