உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் விரிவாக்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை. – ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிப்பு !

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு ஏற்றவாறான நடைமுறைச்சாத்தியமான செயற்திட்டமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான எதிர்காலம் என்ற திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக வறுமையை ஒழித்து, அனைத்து மக்களும் பயனடையத்தக்க வகையிலான உயர் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் விரிவாக்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

அதனை முன்னிறுத்தி கொள்கை ரீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான செயற்திட்டம் தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முதலீட்டு விரிவாக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த உபகுழுவில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, காமினி லொகுகே, பந்துல குணவர்தன, டளஸ் அழகப்பெரும, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர, எஸ்.எம்.சந்திரசேன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் அலி சப்ரி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை மேற்படி உபகுழுவின் செயற்பாடுகளுக்காக இராஜங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, ஜயந்த சமரவீர, திலும் அமுணுகம, டி.வி.சானக, நாலக கொடஹேவா மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *