ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு வடக்கு மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட 13,540 பேரில் 4,230 பேர் நீக்கம் ! – கிளிநொச்சியில் 950 பேர் மட்டுமே தெரிவு.

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு வடக்கு மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட 13,540 பேரில் 4,230 பேர் நீக்கப்பட்டு எஞ்சிய தொகையினருக்கு மட்டுமே நியமனம் வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 2,261 பேரிற்கு வழங்கப்பட்ட அனுமதி 950 பேராக குறைக்கப்பட்டுள்ளதும் நோக்கத்தக்கது.

வருமானம் குறைந்த ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் வடக்கு-கிழக்கு மாகாணத்தினை  தற்சமயத்திற்கு கவனத்தில்கொள்வதில்லை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 19ம் திகதி மாலை அவசர உத்தரவை பிறப்பித்தது.

க.பொ.த சாதாரணம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு பூராகவும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அறிவித்த அரசு தற்போது வடக்கு-கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிட்ட அதேநேரம் ஏனைய 7 மாகாணங்களிலும் அதனை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு கிழக்கின் 8 மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கு கடந்த 19 ஆம் திகதி மாலை தொலை நகல் மற்றும் மின் அஞ்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதேநேரம் இந்த எண்ணிக்கையில் ஏனைய 7 மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு லட்சம் வேலை வாய்ப்பும் 7 மாகாணத்திற்குள் முடக்கப்படுமா என்ற ஐயம் அப்போது எழுப்பப்பட்டது.

இதேநேரம் வடக்கு-கிழக்கில் போட்டியிட்ட அரச ஆதரவுக் கட்சிகள் இந்த வேலை வாய்ப்பினை வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறியே இளையோரின் வாக்கினையும் தேர்தல் பணிகளையும் பெற்றதான குற்றச் சாட்டுக்களும் எழுந்தன.

இந்த நியமனத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6,626 பேரும் , கிளிநொச்சியில் 2,261 பேரும் , மன்னாரில் 1830 பேரும் , முல்லைத்தீவில் 1565 பேரும் நியமிக்கப்படவிருந்ததோடு வவுனியாவில் 1258 பேரும் என 13,540 பேர் நியிமிக்க தயாராக இருந்தனர். இவர்களிற்கு கடந்த 31ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்படும் எனவும் மாவட்டச் செயலகங்களிற்கு உறுதியளிக்கப்பட்டது.

இருந்தபோதும் வடக்கு-கிழக்கிற்கு அதிக நியமனம் செல்வதாக தெரிவித்து அனைத்தும் இடை நிறுத்தப்பட்டு தற்போது ஒரு கிராம சேவகர் பிரிவில் 10 பேரிற்கு மட்டுமே என்ற அடிப்படையில் குறித்த எண்ணிக்கை பாதியாக குறைகின்றது.

இதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட 6626 பேரிற்குப் பதிலாக 4,350 பேருக்கும் , கிளிநொச்சியில் 2,261 பேரிற்கு வழங்கப்பட்ட அனுமதி 950 பேராகவும் , மன்னாரில் 1,830 பேரிற்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,530 பேரிற்குமே சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முன்னர் 1,565 பேரிற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,360 பேர் நியமிக்கப்படவிருப்பதோடு வவுனியாவில் 1,258 பேரும் என முன்னர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,020 பேரிற்கே அனுமதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்திற்கு முன்னர் 13 ஆயிரத்து 540 பேர் நியமிக்க அனுமதிக்கப்பட்டபோதும் இந்த தொகையில் 4,230 பேரை நீக்கி 9,210 பேரிற்கு மட்டுமே நியமனம் வழங்கப்படவுள்ளது.

வடக்கு – கிழக்கிற்கு இடை நிறுத்தினாலும் இந்த நியமனம் கிடைக்கும் எனவும் அரசு எந்த பாராபட்சமும் காட்டாது எனவும் ஆளுங்கட்சிக்கு ஆதரவு வழங்கிய டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் குறிப்பிட்டிருந்த நிலையில் , இது இவ்வாறு நடைபெற்றமையானது பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியதுடன் அரசு ஒரு தலைப்பட்சமாக நடக்கின்றதோ..? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *