வன்னியிலிருந்து இதுவரை ஆயிரத்து நானூறு பேர் இடம் பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ளனர் என்று அரசு தெரிவிக்கின்றது. இவர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கும் நோக்கில் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று வவுனியாவுக்குச் சென்று அந்த மக்களைப் பார்வையிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் கூறியவை வருமாறு:-வன்னியிலிருந்து மக்கள் வவுனியாவுக்கு வர ஆரம்பித்துள்ளனர். தற்போது வரை 540 குடும்பங்களைச் சேர்ந்த 1400 பேர் வவுனியாவை வந்தடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வவுனியா பார்மில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.இந்த மக்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்கும் நடவடிக்கையில் எனது அமைச்சு முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றது.
இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தங்குமிட வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு நான் வவுனியா அரச அதிபருக்கு உத்தரவிட்டுள்ளேன். வன்னியில் இருந்து வவுனியாவுக்குத் தொடர்ந்தும் மக்கள் வந்தால் அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் வழங்குவதற்கு எனது அமைச்சு தயார் நிலையில் உள்ளது – என்றார்.