சீனாவும், ரஷ்யாவும் தங்களது கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தத் தொடங்கியிருந்தாலும், பாதுகாப்பானது என நிரூபிக்கப்படும் வரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும், ஐ.நா. அங்கீகரிக்காது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், தடுப்பூசிகளுக்கு எதிராக போராடுபவர்களின் கருத்துகளைக் கேட்டு மக்கள் குழப்பமடையக் கூடாது என தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக தடுப்பூசிகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பெரியம்மை மற்றும் போலியோவை கட்டுப்படுத்தியதில், தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு உண்டு எனவும் தெரிவித்தார். முழுவதும் பாதுகாப்பானது என உறுதியாகும் வரை எந்த ஒரு தடுப்பூசியையும் அங்கீகரிக்க மாட்டோமெனவும் டெட்ரோஸ் அதனோம் உறுதியளித்தார்.
விரிவான ஆய்வுகளுக்கு முன்னரே ரஷ்யா மற்றும் சீனா தங்களது தடுப்பூசியை பயன்படுத்தி வருவதாக விஞ்ஞானிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரிட்டனும் கொரோனா தடுப்பூசியை முன்னரே பயன்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரவுள்ளதாக, கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.