ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்கத் தரப்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில், இலங்கையின் அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சேய்பி, இத்தாலி மற்றும் நெதர்லாந்துக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள், ருமேனியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தூதரகங்களின் அலுவல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்தனவிற்கு வாழ்த்துத் தெரிவித்த குறித்த பிரதிநிதிகள், தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை நெருக்கமாகச் செயலாற்றி வருவது குறித்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
மேலும், இலங்கையின் மிகமுக்கியமான ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பா விளங்குவதுடன் இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் என்பனவும் அதனூடாகவே அதிகளவில் கிடைக்கப்பெறுவது பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை மிகவும் சிறப்பாகச் செயற்பட்டிருப்பதாகப் பாராட்டுத் தெரிவித்த டெனிஸ் சேய்பி, இதன் விளைவாக இலங்கையில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதும் எவ்வித அச்சமுமின்றி ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை தரக்கூடிய நிலை உருவாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.