தமிழரசு மட்டு வாலிபர் முன்னணியின் “நூறு நாட்களில் ஆயிரம் இளைஞர்களை உள்ளீர்த்தல்” செயற்திட்டம் அங்குரார்ப்பணம் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இரா.சாணக்கியன் அவர்களைக் கௌரவிக்கும் முகமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினால் (04.09.2020) நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், வடகிழக்கு வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் உபதலைவரும், மாநகரசபை உறுப்பினருமான து.மதன், வாலிபர் முன்னணி உறுப்பினரும், மாநகரசபை உறுப்பினருமான அ.கிருரஜன், மட்டக்களப்பு வாலிபர் முன்னணி செயலாளர் க.சசீந்திரன், பொருளாளர் மா.டிலக்சன் உட்பட வாலிபர் முன்னணி உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட வாலிபர் முன்னணியின் உறுப்பினர் இதன் போது தலைவரினால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், அவருக்கான கௌரவிப்பும் இதன் போது இடம்பெற்றது.

வாலிபர் முன்னணியின் வடகிழக்குத் தலைவர் கி.சேயோன் அவர்கள் பொன்னாடை அணிவிக்க, உபதலைவர் து.மதன் அவர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு இக்கௌரவிப்பு இடம்பெற்றது.

இதன்போது வாலிபர் முன்னணியின் ‘நூறு நாட்களில் ஆயிரம் இளைஞர்களை உள்ளீர்த்தல்’ எனும் செயற்திட்டமும் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட செயற்குழுவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு முதற்கட்டமாக வாலிபர் முன்னணியில் இணைந்துகொண்ட புதிய உறுப்பினர்களுக்கான விண்ணப்பப் படிவங்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *