தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வட்டக்கொடை தோட்ட பிரிவுகளான யொக்ஸ்போட், வட்டக்கொடை கீழ்பிரிவு, வட்டக்கொடை மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்ய கோரி நேற்று (05.09.2020) சனிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருகையில்,
ஹேலீஸ் கம்பனியின் கீழ் இயங்கும் வட்டக்கொடை தோட்ட பிரிவுகளான யொக்ஸ்போட், வட்டக்கொடை கீழ்பிரிவு, வட்டக்கொடை மேற்பிரிவு ஆகிய தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட அதிகாரியை இடமாற்ற கோரியே இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அத்தோட்ட தேயிலை தொழிற்ச்சாலையில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை அத்தோட்ட அதிகாரி தாக்க முற்பட்டதாக அத்தொழிலாளி அதிகாரி மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அத்தோட்டத்தைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட அதிகாரியை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
குறித்த அதிகாரி அத்தோட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக பல கெடுபிடிகளை செய்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பலர் குற்றம் சுமத்துகின்றனர்.
அத்தோட்ட அதிகாரிக்கு எதிராக நேற்று (05) காலை அணிதிரண்ட அத்தோட்ட தொழிலாளர்கள், அத்தோட்ட தேயிலை தொழிற்ச்சாலைக்கு அருகாமையில் பதாதைகளையும் சுலோகங்களையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.