“20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை அனைவரது ஒத்துழைப்புடன்தான் நாம் நிறைவேற்ற வேண்டும் ” என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக ஆளும் தரப்பில் ஒருவிதமாகவும் ஏனைய கட்சிகள் ஒருவிதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையிலேயே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை அனைவரது ஒத்துழைப்புடன்தான் நாம் நிறைவேற்ற வேண்டும்.
இதற்கு நாடாளுமன்றில் அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும். இது நாட்டுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடு. இது ஒரு தரப்பை மட்டும் சார்ந்து இருக்கக்கூடாது.
19 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் தான் கடந்த அரசாங்கத்தின்போது கொண்டுவந்தோம். ஒருவர்தான் எதிர்ப்பினை வெளியிட்டார்.
நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று எதிர்ப்பார்த்தே அதனைக் கொண்டுவந்தோம். ஆனால், எமது எண்ணம் நிறைவேறியதா இல்லை என்பதில் சந்தேகம் உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.