மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகின்றன. அதற்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. இதில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இறுதிப் போட்டி வருகின்ற நவம்பர் 10- ம் தேதி நடக்கிறது. ப்ளே ஆப் சுற்று நடக்கும் நகரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.சி.சி.ஐ வெளியிட்ட அட்டவணையில் ரவுண்ட் ராபின் போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் 19-ம் தேதி முதல் 46 நாட்களில் 56 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் 10 நாட்களில் இரு ஆட்டங்கள் நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய 3 நகரங்களில் டி20 போட்டிகள் நடக்கின்றன. இரவு நடக்கும் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கும், இரு போட்டிகள் நடக்கும் நாட்களில் முதல் போட்டி மாலை 3.30 மணிக்கும் தொடங்குகிறது.
இதன்படி வரும் 19-ம் தேதி சனிக்கிழமையன்று துபாயில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 2-வது நாள் 20-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியும், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
3-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. அதன்பின் 22-ம் தேதி ஷார்ஜாவில் முதல் போட்டி நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது.
துபாய் நகரில் 24 லீக் போட்டிகளும், அபுதாபியில் 20 லீக் ஆட்டங்களும், ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடக்கின்றன. ப்ளே ஆப் நடக்கும் இடங்களும், இறுதிப்போட்டி நடக்கும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.