யு.எஸ் ஓபின் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றில் ஆடிய நோவக் ஜோகோவிச் அமெரிக்க ஓபின் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உலகின் நம்பர் 1 வீரரை தகுதி நீக்கம் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பாப்லோ கரேனோ பஸ்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் செட்டின் போது சர்வ் ஒன்றைத் தோற்று ஜோகோவிச் 5-6 என்று பின் தங்கினார். இதில் சற்றே வெறுப்படைந்த ஜோகோவிச் பந்தை மட்டையால் கொஞ்சம் வேகமாகவே பின் பக்கமாக வெறுப்பில் அடிக்க அது அங்கு நின்று கொண்டிருந்த பெண் லைன் நடுவரின் தொண்டையைத் தாக்கியது, நடுவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
உடனே ஜோகோவிச் அவர் அருகே சென்று அவருக்கு உதவினார், தேற்றினார். ஆனால் யு.எஸ் ஓபின் தொடர் ரெஃப்ரி சோரம் ஃப்ரீமெல் மைதானத்த்துக்குள் விரைந்து வந்தார். ஆட்ட நடுவர் ஆரிலி டூர்ட்டிடம் பேசினார், கிராண்ட் ஸ்லாம் கண்காணிப்பு அதிகாரி ஆண்டிரியாஸ் எக்லியும் உடனிருந்தார்.
யு.எஸ் ஓபின் அதிகாரிகளுக்கும் நோவக் ஜோகோவிச்சுக்கும் இடையே நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. நோவக் ஜோகோவிச் தான் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை தெரியாமல்தான் நடந்து விட்டது மன்னிக்கவும் என்றார். ஆனால் கிராண்ட் ஸ்லாம் விதிகள் நோவக் ஜோகோவிச்சுக்கு எதிராகச் சென்றன. கடைசியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார், அவர் பரிதாபமாக தன் கிட் பேக்கை எடுத்து கொண்டு வெளியேறினார்.
எதிர் வீரர் பஸ்டா அதிர்ச்சியில் உறைந்தார். 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவு முடிந்தது.
இதற்கு முன்பாக 1995-ம் ஆண்டு விம்பிள்டனில் பிரிட்டன் வீரர் டிம் ஹென்மன் இதே காரணத்துக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
யு.எஸ் ஓபினிலிருந்து ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் யு.எஸ் ஓபனில் அவர் எடுத்த தரவரிசைப் புள்ளிகளை இழக்கிறார். மேலும் அபராதத் தொகையையும் ஜோகோவிச் செலுத்த வேண்டும்.
மேலும் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பையும் அவர் புறக்கணித்ததால் இன்னொரு அபராதமும் விதிக்கப்படவுள்ளது.
நோவக் ஜோகோவிச் தடை குறித்து கருத்துக் கூறிய அனைவருமே வேறு வழியில்லை, ஜோகோவிச் தன் விதியை சந்தித்துதான் ஆக வேண்டும், விதிமுறைகள் அப்படி என்கின்றனர்.
சம்பவத்துக்குப் பிறகு ஜோகோவிச் இறுகிய முகத்துடன் தன் கருப்பு டெஸ்லா காரில் பறந்தார். யு.எஸ் ஓபனில் இதனால் பரபரப்பு ஏற்பட்டது, ஜோகோவிச்சின் செர்பிய ரசிகர்களுக்கு தகுதி நீக்கம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடந்த சம்பவத்துக்கு ஜோகோவிச் மன்னிப்புக் கேட்டு, வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதில், “இந்த ஒட்டுமொத்த சூழ்நிலையும் என்னை வருத்தமடையச் செய்ததோடு என்னை வெறுமையாக்கியுள்ளது. காயம்பட்ட அவரை நான் உடனடியாக கவனித்தேன் கடவுள் புண்ணியத்தில் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறார்.
அவருக்கு இதன் மூலம் ஏற்படுத்திய வேதனைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றே செய்யவில்லை. ஆனால் பெரும்தவறிழைத்து விட்டேன். அவரது அந்தரங்கத்திற்கு மதிப்பளித்து அவரது பெயரை நான் வெளியிடவில்லை. தகுதி நீக்கம் குறித்து நான் மீண்டும் என் ஏமாற்றத்தை தணிக்க பணியாற்ற வேண்டும்.
இந்தச் சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு ஒரு வீரராகவும் இனிமேலாவது ஒரு மனிதனாகவும் மாற முயற்சிகள் மேற்கொள்வேன். யுஎஸ் ஓபினிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஆதரவளித்த என்னைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி, என்னை மன்னித்து விடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அண்டு 26 போட்டிகளில் வென்று ஒன்றைக் கூட தோற்காது 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் நோக்கி சென்று கொண்டிருந்த பொது கண நேர வெறுப்பின் செயலால் பலனை அனுபவித்து வருகிறார் ஜோகோவிச்.