விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் (Julian Assange), அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கொரோனா நெருக்கடி காரணமாக இந்த வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெறாத நிலையில், மீண்டும் ஆரம்பமாகும் வழக்கின் தீர்ப்பு ஜூலியன் அசாஞ்சின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வழக்கு என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட 49 வயதாகும் ஜூலியன் அசாஞ், உலக நாடுகளின் இரகசிய ஆவணங்கள், மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், முறைகேடுகள், ஊழல் மற்றும் போர்க்குற்றங்கள் போன்ற இரகசிய ஆவணங்களை ஹக் செய்து விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக, ஈராக்கில் அமெரிக்க இராணுவம் நடத்திய வன்முறைகள், அரசியல் கைதிகளை அடைக்கும் குவாண்டனமோ சிறைச்சாலை உள்ளிட்ட தகவல்கள் உலகையே அதிர்ச்சியுறச் செய்தன.
இது அமெரிக்காவை பெரியளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அசாஞ்சே மீது அமெரிக்கா வழக்குத் தொடர்ந்ததுடன் அமெரிக்காவுக்கு எதிராக செயற்படும் ரஷ்ய உளவாளி என அசாஞ் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன், சுவீடனில் அவர் மீது பாலியல் வழக்கும் பதிவானது.
இந்நிலையில் ஜூலியன் அசாஞ்சுக்கு ஈக்குவாடோர் ஆதரவு வழங்கிய நிலையில் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதாரகத்தில் அவர் தஞ்சமடைந்தபோதும் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஈக்குவடோர் அவரைக் கைவிட்டது.
இதைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் ஈக்குவடோர் தூதரகத்துக்குள் வைத்து பிரித்தானிய பொலிஸார் அவரைக் கைதுசெய்த நிலையில் தென்கிழக்கு லண்டனில் உள்ள HMP பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசாஞ் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
ஜூலியன் அசாஞ்சை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி அமெரிக்கா பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்த நிலையில், அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என லண்டன் நீதிமன்றத்தில் அசாஞ் வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.