மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடு என்ற வகையில் இலங்கைக்கு உலக மத்தியில் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள கூடியதாக அமைந்ததாகவும், அவை அனைத்திற்கும் அமரர் சந்திரசிறி கஜதீரவின் அரசியல் அறிவு மற்றும் நற்பண்பு என்பனவே காரணமாக அமைந்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறை உயன்வத்த எச்.கே.தர்மதாச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு நினைவு விழாவில் கலந்து கொண்டு சந்திரசிறி கஜதீரவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் தலைமை மிகவும் முக்கியமானதாக அமைந்ததாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
´யுத்தம் நிறைவடையும் காலத்தின் போது சந்திரசிறி கஜதீர சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக சேவையாற்றினார். இந்நாட்டின் சுமார் 13 ஆயிரம் தமிழீழ விடுலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெறுவதற்காக அவரிடம் சரணடைந்தனர்.
இது மிகவும் பொறுப்பான முறையில் மேற்கொள்ள வேண்டிய கடமையாக இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில், 13 ஆயிரம் தமிழீழ விடுலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு எவ்வித பிரச்சனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டனர். அது மிகவும் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவும் அமைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.