அமெரிக்க கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளாய்ட் என்பவர் அந்நாட்டு காவல் துறையினரால் கொலைசெய்யப்பட்டதை கண்டித்து அமெரிக்காவிலும் உலகெங்கிலும் அதனை கண்டித்து பாரியளவிலான போராட்டங்களும் எதிர்ப்புக்களும் அமெரிக்காவை நோக்கி வீசப்பட்ட நிலையில் பிளாய்ட் கொலை செய்யப்பட்டு 100 நாட்களை தாண்டியும் அதற்கான நீதி வேண்டி அமெரிக்காவில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளன.
இந்நிலையில் அமெரிக்கப் பொலிஸாரால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் பிளாய்ட்டுக்கு நீதி கோரி போர்ட்லாண்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் 100நாட்களைக் கடந்துள்ளன. இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற 100ஆவது நாள் போராட்டத்தில் போராட்டக்கார்கள் பொலிஸார் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதற்காக உள்ளூர்ப் பொருள்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட குண்டுகள், கற்கள், மோட்டார் பற்றிகள் என்பவற்றை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இதன்போது 59 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைத் தாக்குதலை நடத்தப்பட்டது எனவும் போர்ட்லாண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்தவார இறுதியில் போர்ட்லாண்டில் இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்படமையும் குறிப்பிடத்தக்கது.