வட மேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களுக்கு வேட்பு மனுத்தாக்கலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 12 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கையில்; வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 12 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் மூன்று பெரிய வன்முறைச் சம்பவங்களாகும்.
இரு மாகாணத்திலும் தேர்தல் தொடர்பில் மக்களுக்கு ஈடுபாடு குறைந்து காணப்படுவதால் தேர்தல் தொடர்பிலான வன்முறைகளும் வெகுவாக குறைந்து காணப்படுகின்றது. எனினும், தேர்தல் நெருங்கும் போது மக்களின் ஈடுபாடு அதிகரிக்க வன்முறைகள் அதிகரிக்கும் சாத்தியமுள்ளது. கடந்த முறை வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை வன்முறைகள் குறைவாகவே காணப்படுகின்றன. எமது இயக்கம் தேர்தலைக் கண்காணிப்பதற்கான பணிகள் குறித்துக் கண்காணிப்பு உறுப்பினர்களுக்கு விளக்கங்களை அளித்து வருகின்றது. தற்போது புத்தளம் மாவட்டத்தில் இதனை மேற்கொண்டுவரும் நிலையில், இருமாகாணங்களிலும் நான்கு மாவட்டங்கள் இவற்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்