லண்டனில் இருந்து தொலைபேசியில் தமிழ்நாட்டில் 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

phone.jpgதமிழ் நாட்டில் 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. லண்டனில் இருந்து போனில் மிரட்டியவன் யார் என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை சரக பொலிஸ் டி. ஐ. ஜி. அலுவலகம் ரேஸ்கோர்சில் உள்ளது.

(14) இரவு 10.30 மணி அளவில் இந்த அலுவலகத்துக்கு ஒரு மர்ம டெலிபோன் வந்தது. போனில் பேசியவர், “கோவை, திருச்சி, மதுரை ஆகிய 3 விமான நிலையங்களில், தொடர்ச்சியாக குண்டுகள் வெடிக்கும் என்றும், முடிந்தால் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்றும் ஆங்கிலத்தில் கூறி போனை வைத்து விட்டார். அந்த டெலிபோன் எண், காலர் ஐ. டி. யில் பதிவாகியிருந்தது. அது இங்கிலாந்து நாட்டு தலைநகர் லண்டன் நகர டெலிபோன் எண் ஆகும்.

கோவை சரக பொலிஸ் டி. ஐ. ஜி. சிவனாண்டி, அதுபற்றி உடனடியாக சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டன. கோவை ரேஸ்கோர்ஸ் பொலிஸார் இதையொட்டி வழக்குப் பதிவு செய்து லண்டனில் இருந்து போனில் மிரட்டியது யார் என்று புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மிரட்டலைத் தொடர்ந்து கோவை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை கமாண்டன்ட் அருண்சிங் தலைமையில் அதிரடி படையினரும், கோவை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு பொலிஸாரும் மோப்ப நாய்களின் உதவியுடன் இரவோடு இரவாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடந்த இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. கோவை விமான நிலையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை அவினாசி சாலையிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில், பொலிஸார் தடுப்புகளை அமைத்து விமான நிலையத்துக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிர பரிசோதனைக்குப் பிறகு தான் அனுமதித்தனர்.

விமான நிலையத்தின் நுழைவு வாயிலில், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் புதிய நவீன கருவி மூலம் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. இதனை தாண்டிச் செல்லும் பயணிகள் “ஸ்கேனர்” மற்றும் “மெட்டல் டிடெக்டர்” மூலம் சோதனை செய்யப்படுகிறார்கள்.

விமான நிலையத்திற்குள் வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக விமான நிலையத்தின் நுழைவு வாயிலிலிருந்து பயணிகள் விமானத்திற்குள் ஏறும் வரை அனைத்து பகுதிகளிலும் 32 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் இரண்டு புறமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு எந்திர துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர விமான நிலையத்தின் முன்பகுதியில் சுமார் 10 கமாண்டோ வீரர்கள் குண்டு துளைக்காத உடை அணிந்து இயந்திர துப்பாக்கியுடன் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *