ஊடக அடக்குமுறையைக் கண்டித்து ஜே.வி.பி. தொழிற்சங்கம், மனித உரிமை அமைப்பு உட்பட ஐந்து அமைப்புகளுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளியரங்கில் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மூன்று மணிக்கு நடத்தவுள்ளது. இது தொடர்பாக கொழும்பு தேசிய நூலகத்தில் ஜே.வி.பி. நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்கா கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் அங்குமேலும் பேசுகையில்; “அரசாங்கம் ஜனநாயகத்தை இல்லாதொழித்து சர்வாதிகார போக்கில் செயற்பட்டுவருகின்றது. இதற்காகவே நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுகின்ற 17வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்கிறது. இதனை அமுல்படுத்துவது மூலம் அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டு சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்கள் உட்பட சுயாதீன ஆணைக்குழுக்கள் இயங்கும் என்பதால் இதனை செய்யாதுள்ளது. அதேசமயம் நீதிமன்ற தீர்ப்பையும் அரசாங்கம் அவமதித்து வருகின்றது.
அரசின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வருகின்ற ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இதன் உச்சமாக சிரச எரியூட்டப்பட்டும் லசந்த விக்கிரமதுங்க என்ற பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுமுள்ளார். இவ்வாறான தாக்குதல் மக்களின் செய்தியை அறிந்து கொள்ளும் மற்றும் வெளியிடும் அடிப்படை உரிமைகளை இல்லாமல் செய்துள்ளது. இந்த மக்களின் உரிமைகளை மதிக்காது ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாது.
இதனை தடுப்பதற்கு தேசப்பற்றுள்ள தேசிய நிலையம் ஊடகதொழிற்சங்கம் மற்றும் மனித உரிமை அமைப்பு உட்பட ஐந்து அமைபுகள் எம்முடன் இணைந்துள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளியரங்கில் ஊடக அடக்குமுறையைக் கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடத்தவுள்ளோம். தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்கும் முகமாக யுத்தத்தை நடத்துவதாகக் கூறும் அரசாங்கம் இந்த விடுதலையின் பின் அம்மக்களுக்கு எதனை செய்யப்போகின்றதென கேட்கின்றேன்.
நாட்டில் எழுத்துச் சுதந்திரத்தை தடுக்கின்றவகையில் செயற்படும் அரசு அம்மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுக்கொடுக்குமாவென நான் கேட்கின்றேன். எனவே நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழித்து சர்வாதிகாரப்போக்கில் செயற்படுவதனை தடுப்பதற்குரிய தேவையேற்பட்டுள்ள நிலையில் தேசப்பற்றாளர்கள் மற்றும் பொது அமைப்புகள் எம்முடன் கைகோர்க்க வேண்டும். இந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தம்பிர அமிலதேரர், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பாலசூரிய மற்றும் மனித உரிமை அமைப்பின் அநுர கருணாதிலக ஆகியோரும் உரையாற்றினர்.