முழு உலகமும் கொரோனா வைரஸ் பாதிப்பில் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கையில் பொருளாதாரம் முகாமைத்துவம் செய்யப்பட்டு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று(09.09.2020) பாராளுமன்றத்தில் நிதியமைச்சின் உற்பத்தி வரி திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தின் பின்னரான இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே நாட்டின் பொருளாதாரம் மிகமோசமான வீழ்ச்சியடைந்ததுடன் அரசாங்கத்தின் கடன் சுமை வெகுவாக அதிகரித்தது என தெரிவித்த அமைச்சர்,மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தலைமையிலான ஐந்து வருட காலத்தில் நாட்டில்பாரிய பொருளாதார வளர்ச்சி காணப்பட்டதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
தற்போதைய கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் காலத்தில் நாட்டு மக்களுக்கு பாரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வரி நிவாரணம் மற்றும் கடன் நிவாரணம் ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிட முடியும். கடன்களுக்கான வட்டி தனி இலக்கமாக வைக்கப்பட்டுள்ளமை விவசாயிகளுக்கும் கைத்தொழில் துறை சார்ந்தவர்களுக்கும் பெரும் பலமாக அமைந்துள்ளது.
இலட்சக்கணக்கான விவசாயிகளின் தொழில் துறைகளை பாதுகாக்கும் வகையில் இன்று சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வரிச் சலுகை மூலம் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படுமென கூறுபவர்கள் பொருளாதார முகாமைத்துவம் பற்றி அறியாதவர்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நாட்டில் யுத்தம் இல்லாத நிலையில் வெளிநாட்டு கையிருப்பு பெரும் வீழ்ச்சி நிலையையே கண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.