பயனற்ற விதத்தில் உள்ள மாகாண சபைத் தேர்தலால் எவ்வித பயனும் எவருக்கும் கிடைக்கப் போவதில்லை மாறாக மக்களின் வரிப்பணமே வீண்விரயமாக்கப்படுகிறது என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடும் கருத்துக்களை இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் குறிப்பிடுகையில், “அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய வேண்டும் என நான் தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைப்பதாக குறிப்பிட்டதற்கு தற்போது மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.
மக்களின் வரிப்பணத்தில் வெள்ளை யானையாக செயற்படும் மாகாண சபைகளினால் எவ்வித சேவையும் மக்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்பதை அரசியலில் இருந்தபோதும் குறிப்பிட்டேன். தற்போதும் குறிப்பிடுகிறேன். அமைச்சுப் பதவி கிடைக்கப் பெற்றவுடன் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை கிடையாது.
இனப் பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு கிழக்கில் படுதோல்வியடைவோம் என்பதை நன்கு அறிந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாண சபைத் தேர்தலை நடத்தினார். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அரசியல் உரிமை ஜனநாயக முறையில் வழங்கப்பட்டது.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக கடந்த அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.
மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அன்றும் இன்றும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.
பயனற்ற விதத்தில் உள்ள மாகாண சபை தேர்தலால் எவ்வித பயனும் எவருக்கும் கிடைக்கப் போவதில்லை. மக்களின் வரிப்பணமே வீண்விரயமாக்கப்படுகிறது. மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கொள்கையாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், பௌத்த மதம், சிங்கள இனம் தொடர்பாக நாடாளுமன்றில் குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தக்கதாக காணப்படுகிறது.
இவரது கருத்தை இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்து என ஏற்க முடியாது. அரசியல் நோக்கங்களுக்காக இவர் தமிழ் மக்களை பகடைக் காயாக பயன்படுத்திக்கொள்கிறார்.
எனினும், தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்துக் கொண்டு அரசாங்கம் சிறந்த முறையில் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும்” என்றார்.