போலி தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களை ஏமாற்றுபவர்களை போலன்றி சாத்தியமான செயற்பாடுகளுடன் தமிழ் மக்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துவதே தமது நோக்கமென பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (10.09.2020) நிதியமைச்சின் உற்பத்தி வரி தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 ஆயிரத்து 198 வாக்குகளை வழங்கி பெரும் நம்பிக்கையுடன் தனக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
போலி தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களை ஏமாற்றுவதே இடம்பெற்று வருகின்றது. கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவ விட்டுவிட்டு இன்று பலர் பாராளுமன்றத்தில் வெறுமனே குரல் எழுப்பி வருகின்றனர்.
மைத்திரி, ரணில், சம்பந்தன் இணைந்த நல்லாட்சி அரசாங்கம் மிக மோசமான செயற்பாடுகளையே அதன் ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்துள்ளது.
அந்த வகையில் புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தயாராக உள்ளது. ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதும் எமது மக்களின் வளர்ச்சியிலும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.